Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம்

அக்டோபர் 31, 2023 11:43

நாமக்கல்: ஐப்பசி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கல் கோட்டை பகுதியில் ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையின் எதிரில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி, சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

நாள்தோறும், இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினசரி வருகை தரும் திரளான பக்தர்கள், ஸ்ரீ ஆஞ்சநேயரை தரிசனம் செய்து செல்கின்றனர். வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருளும் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, தினசரி காலை 9 மணிக்கு 1008 வடைமாலை அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடைபெறும்.

தொடர்ந்து 10 மணிக்கு, மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய் தூள், திருமஞ்சள், பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிசேகம் நடைபெறும். இதனையடுத்து சுவாமிக்கு மலர் அங்கி, வெள்ளிக் கவசம், தங்கக் கவசம், முத்தங்கி போன்ற சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

ஐப்பசி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, காலை 9 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1,008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்று கனகாபிசேகத்துடன் அபிசேகங்கள் நிறைவு பெற்றது.

தொடர்ந்து, கட்டளைதாரர்களின் வேண்டுகோளின் பேரில், சுவாமிக்கு விலை உயர்ந்த முத்துக்களால் தயாரிக்கப்பட்ட முத்தங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் திரை விலக்கப்பட்டு, சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் உதவி கமிஷனர் இளையராஜா  செய்திருந்தார்.

தலைப்புச்செய்திகள்