Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரஷ்யா சென்று திரும்பிய மாணவ மாணவிகளுக்குப் பாராட்டு விழா

அக்டோபர் 29, 2023 05:08

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து 11 மாவட்டங்களைச் சேர்ந்த 50 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் ரஷ்யாவுக்கு கல்விப் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பினர்.

அவர்களுக்கு கல்வி நிறுவன வளாகத்தில் பாராட்டு விழா நடத்தப் பட்டது. 50 மாணவர்களுக்கும் இலவச கல்வி, இலவச தங்குமிடம் வழங்கப்படும் கல்லூரியில் உள்ள எந்த துறையில் வேண்டுமானாலும் சேர்ந்து பயில அனுமதிக்கப்படும் என கல்வி நிறுவனங்களின் தலைவர்  ஆர். சீனிவாசன் அறிவித்தார்.

இன்றைய தலை முறையினரிடம் விண்வெளிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரமோஸ் மைய நிறுவனரும் மூத்த விஞ்ஞானியுமான சிவதானப்பிள்ளை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஜனவரி 26 ஆம் தேதி முதல் 15 அமர்வுகளாக ராக்கெட் தொழில்நுட்பம் பற்றி இணைய வழியில் அகத்தியர் அறக்கட்டளை மற்றும் யூஸ் சாகோ சொல்யூஷன்ஸ் உடன் இணைந்து பயிற்சி அளித்தனர்.

இந்த பயிற்சியில் 29 மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களில் சிறந்த பயிற்சி பெற்ற 50 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, ரஷ்யாவில் உள்ள கலாச்சாரம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தை அறியும் விதமாக செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அக்டோபர் ஏழாம் தேதி வரை ரஷ்ய நாட்டில் உள்ள மிகப்பெரிய எருமிட்டேஜ் அருங்காட்சியகம் மியூசியம், விக்டரி ஸ்கொயர், மெசேஜ் ஆப் லெனின் காரட் ஸ்கொயர் கிரிமிலின் மியூசியம் ஆகியவற்றைக் பார்வையிட்டனர்.

பயிற்சி மாணவர்கள் அங்குள்ள விண்வெளி வீரர்களின் வாழ்க்கை முறை உணவுப் பழக்கவழக்கம் பயிற்சி மற்றும் இதர ஆய்வுகள் குறித்து விஞ்ஞானிகள் மூலம் தெரிந்து கொண்டனர்.

அவ்வாறு ரஷ்யா சென்று திரும்பிய 50 மாணவ மாணவிகளுக்கும் ராக்கெட் ராஜாக்கள், ராணிகள் என சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்டு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆர். சீனிவாசன் தலைமை வகித்தார். தலைமை விருந்தினராக தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மரு. மதிவேந்தன் கலந்து கொண்டார். கௌரவ விருந்தினராக சென்னையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பு தூதரக கான்செல் ஜெனரல்  ஓலக் என் அவ் தீவ், சிறப்பு விருந்தினர்களாக சென்னை ரஷ்ய கலாச்சாரத்துறை துணை கான்சல் அலெக்சாண்டர் டோடோனோவ், ஐ.ஆர்.சி.யூ எப்.எஸ் மற்றும் ஐ.ஆர்.சி.சி.ஐ பொது செயலாளர் பி. தங்கப்பன், இந்தோ ரசியா சேம்பர் ஆப் வர்த்தகம் அண்ட் தொழில்கள் நிர்வாகி காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானி கோகுல், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவன முதன்மை மேலாளர் பாலகுமாரன் கே. எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி அகிலா முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வெளிநாடு சென்று திரும்பிய மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி பேசிய போது கூறியதாவது, இந்தோ சோவியத் நட்புறவு மிக நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. ரஷ்யாவின் தலைவராக கருதப்படும் ஜோசப் ஸ்டாலின் கம்யூனிசத்தை கைக்கொண்டு இருந்ததைப் போல் தமிழ்நாடு முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் திராவிட மாடல் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

அனைவரும் பொருளாதாரத்திலும் கல்வியறிவிலும் சமூகத்திலும் சமநிலை பெற வேண்டும் என்பதே திராவிட மாடலின் நோக்கம். இந்த இளம் வயதில் அறிவியல் துறையில் ஆர்வம் கொண்டு பல்வேறு பயிற்சிகளைப் பெற்று வெளிநாடுகளில் சென்று தொழில்நுட்ப நிலையங்களை பார்வையிட்டு வந்திருக்கிற இவர்களைப் பாராட்டுகிறேன். இவர்களுக்கு முழுமையான கல்விச் சலுகை வழங்கி உள்ள கே.எஸ்.ஆர் நிறுவனத்தையும் பாராட்டுகிறேன்.

இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான் இதுபோல் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு பயிற்சி பெற்று வருகின்றனர் இதற்காக முழு முயற்சி எடுத்த விஞ்ஞானி சிவதான பிள்ளைக்கும் அவர்களோடு ஒத்துழைத்து மாணவர்களை நல்வழிப்படுத்தி சிறந்த விஞ்ஞானிகளாக உருவாக்க பயிற்சி கொடுத்த அனைவரையும் பாராட்டி வாழ்த்துகிறேன் எனக் கூறினார்.

முன்னதாக கே எஸ் ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார், நிகழ்ச்சியின் முடிவில் கே எஸ் ஆர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்