Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்த குட ஊர்வலம்

அக்டோபர் 26, 2023 05:26

நாமக்கல்: பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், மோகனுாரில் காந்தமலை என்ற குன்றின் மேல், ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. சிவபார்வதியின் மகன் முருகன் நின்ற தலம் என்பதால், மகனுார் என்று அழைக்கப்பட்ட இத்தலம், பின்னர் மோகனுார் என்று மருவியது. பழனியைப் போலவே இத்தலத்தில் முருகன் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

முருகன், தனக்கு மாம்பழம் கிடைக்காததால், தாய் தந்தையரிடம் கோபித்துக் கொண்டு, கயிலாயத்தில் இருந்து பழனி நோக்கிப் புறப்பட்டார். அவரைப் பின்தொடர்ந்த பார்வதிதேவி, ‘முருகா நில்’ என்று அழைத்தார். தாயின் சொல் கேட்டு முருகன் நின்றார். தாயின் அறிவுரை சொல் கேட்டும் அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. பார்வதி தேவி அழைத்தபோது முருகன் நின்ற இடம் தான் இத்தலம் என்று தல வரலாறு கூறுகின்றது.

இக்கோவில் திருப்பணி, மேற்கொள்ளப்பட்டு முடிந்ததையடுத்து, அக். 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, தீர்த்தக்குடம் ஊர்வலம் நடந்தது. 

அதிகாலை காவிரி ஆற்றுக்கு சென்ற, 5,008 பக்தர்கள் புனித நீராடி, தீர்த்தக்குடம், பால் குடம் எடுத்துக் கொண்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கடைவீதி, பஸ் ஸ்டாண்ட், நாமக்கல் சாலை வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். ஊர்வலத்தில், குதிரை, காளை மாடுகள் அணிவகுத்து வந்தன.

தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்த ஊர்வலத்தை, நாமக்கல் எம்.எல்.ஏ.வும், விழாக்குழு தலைவருமான ராமலிங்கம் துவக்கி வைத்தார்.

அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி, உறுப்பினர்கள் செல்வசீராளன், டாக்டர் மல்லிகா, ராம சீனிவாசன், ரமேஷ்பாபு, அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா, விழாக்குழு நிர்வாகிகள் நவலடி, வக்கீல் கைலாசம் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்