Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தீபாவளி போனஸ் - எதிர்பார்ப்பில் விசைத்தறி தொழிலாளர்கள்

அக்டோபர் 25, 2023 11:36

பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் விசைத்தறி தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளிபாளையம் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் பொழுது விசைத்தறி தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் சதவீதம் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு போடப்பட்ட போனஸ் ஒப்பந்தம் காலாவதியாகிவிட்ட நிலையில், புதிய ஒப்பந்தம் போட வேண்டிய தற்போதைய சூழலில், கடந்த வாரத்தில் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டமானது பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். பகுதியில் நடைபெற்றது .

இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு போனசாக 20 சதவீதம் கேட்பது என பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இது குறித்து நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.அசோகன் கூறும் பொழுது, பள்ளிபாளையம் வட்டாரத்தில் மட்டும்  20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

அருகிலுள்ள குமாரபாளையம் திருச்செங்கோடு என உள்ளடக்கினால் மொத்தமாக 50,000 தொழிலாளர்கள் இந்த விசைத்தறி தொழிலை மட்டுமே நம்பி குடும்பம் குடும்பமாக பணியாற்றி வருகின்றனர்.

தற்போதையுள்ள சூழலில் விலைவாசி உயர்வு ,மின் கட்டண உயர்வு,பால் விலை உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக விசைத்தறி தொழிலாளர்கள் போதிய வருமானம் இன்றி தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

பொருளாதார  பாதிப்பால் விசைத்தறி தொழிலாளர்கள் நுண் நிதி நிறுவனங்களில் கடன் பெறுவது, கந்துவட்டி கும்பலிடம் சிக்குவது போன்ற நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகிறது. இத்தகைய மோசமான சூழலில் இருந்து விசைத்தறி தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாமக்கல் விசைத்தறி தொழிலாளர் சங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு போடப்பட்ட மூன்று ஆண்டு கால ஒப்பந்தமான, 9.5% போனஸ் வழங்குவது என்ற ஒப்பந்தம் காலாவதி ஆகியுள்ள நிலையில், தற்போது புதிய ஒப்பந்தமாக 20% சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தொழிலாளர் நலத்துறைக்கும், விசைத்தறி உரிமையாளர்களுக்கும் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.

எனவே இது குறித்து தமிழக அரசும் உரிய கவனம் செலுத்தி விசைத்தறி தொழிலாளர்களின் நியாயமான 20% தீபாவளி போனஸ் பெற்று தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீபாவளிப் பண்டிகையை விசைத்தறி தொழிலாளர்கள் கொண்டாடுவதற்கு ஏதுவாக 15 நாட்களுக்கு முன்பாகவே தீபாவளி போனசை வழங்கிட வேண்டும்.

எனவே இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிபாளையம் ஒன்றிய பகுதியில் பல்வேறு இடங்களில், தெருமுனைப் பிரச்சாரங்கள், அடுத்த வாரத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட தொடர் பிரச்சாரங்கள் நடைபெற உள்ளது.

தொழிலாளர்களை அணிதிரட்டும் வகையில் வீடு வீடாகச்  சென்று விசைத்தறி தொழிலாளர்களை நேரில் சந்தித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வருகிறோம்  எனத் தெரிவித்தார் .

தலைப்புச்செய்திகள்