Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்

அக்டோபர் 25, 2023 11:23

திருச்செங்கோடு: திமுக இளைஞரணி, மருத்துவர் அணி,மற்றும் மாணவர் அணி சார்பாக நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை விளையாட்டு மற்றும் இளைஞர் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் காணொலிக் காட்சி மூலம் துவங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அனைவரும் தாங்கள் கையெழுத்திட்ட அட்டைகளை உயர்த்திப் பிடித்து அதற்கான பெட்டியில் போட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நீட் விலக்கு நம் இலக்கு என்ற கோஷத்தை முன்னிறுத்தி நீட் தேர்விற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை திமுக முன்னெடுத்து வருகிறது . அதன்படி தமிழகத்தில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து பெறும் விதமாக கையெழுத்து இயக்கத்தை சென்னையில் தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த இயக்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில்  கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த கையெழுத்து இயக்கத்தை திமுக மருத்துவர் அணியினர், திமுக மாணவர் அணியினர், திமுக இளைஞரணியினர் 500க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கையெழுத்துக்களை இட்டு அட்டைகளை உயர்த்திப் பிடித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்களிடம் நீட் தேர்வின் விபரீதங்கள் குறித்து எடுத்துக் கூறி கையெழுத்து பெற்று அனுப்ப வேண்டும் என்று நிர்வாகிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருச்செங்கோட்டில் அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கையெழுத்துக்களை இட்டு நீட் தேர்வுக்கு எதிராகத் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர், இந்த கையெழுத்து பெற்ற அட்டைகள் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள இளைஞர் அணியின் இரண்டாவது மாநாட்டில் முதல்வரிடம் ஒப்படைக்கப்படும்.

அவர் குடியரசு தலைவருக்கு அந்த கையெழுத்துக்களை அனுப்பி வைத்து தமிழகத்தின் கண்டனத்தைப் பதிவு செய்வார் என்று அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டு கையெழுத்திட்டு தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

தலைப்புச்செய்திகள்