Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தகுதியான லாரி உரிமையாளர்களுக்கு டி.என்.சி.எஸ்.சி.டெண்டர் வழங்க கோரிக்கை

அக்டோபர் 06, 2023 08:31

நாமக்கல்: தகுதியான லாரி உரிமையாளர்களுக்கு டி.என்.சி.எஸ்.சி.டெண்டர் வழங்க லாரி உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தகுதியான லாரி உரிமையாளர்களுக்கு டி.என்.சி.எஸ்.சி.டெண்டர் வழங்க கோரிக்கை
சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன், டிரான்ஸ்போர்ட் டெண்டரை குறிப்பிட்ட தனியார் கம்பெனிக்கு மட்டுமே வழங்குவதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 4,600 கோடி இழப்பு ஏற்படுகிறது.

எனவே அனைத்து தகுதியான லாரி உரிமையாளர்களுக்கும் டெண்டர் வழங்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் (டிஎன்சிஎஸ்சி) மூலம் கிராமங்களுக்கும், நகரப் பகுதிகளுக்கும் அடித்தட்டு மக்களுக்காக, ரேசன் அரிசி, கோதுமை, எண்ணெய் உட்பட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. இதனைக் கொண்டு செல்லும் லாரிகளுக்கு டிரான்ஸ்போர்ட் ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. 

2ஆண்டுகளுக்கான டெண்டர் ஒப்பந்தம் ஆன்லைன் மூலம் போடப்பட்டது. ஒப்பந்தத்தில், தமிழகம் முழுவதும் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் ஒப்பந்தத்தில் பங்கேற்றுள்ளன.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த ஒப்பந்தத்தில் ஒரு ஆண்டுக்கு ஒரு முறை ஒப்பந்தம் என்ற விதியை மாற்றி 5ஆண்டுக்கு ஒரு முறை என திருச்செங்கோட்டை சேர்ந்த இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு அரசியல்வாதிகளின் பரிந்துரையின் பேரில், அதிக வாடகை தொகை அடிப்படையில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

இதனால் தமிழக அரசுக்கு ஒரு ஆண்டுக்கு சுமார் ரூ.4,600 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுளது.

இது குறித்து சமூக அமைப்புகளும், தன்னார்வ அமைப்புகளும் அந்த தனியார் நிறுவனத்தின் மீது பல புகார்களை கொடுத்தது. அப்போது சத்துணவு திட்டத்திற்கு முட்டை வழங்குவதில் இதே நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து கோடிக்கணக்கில் ஊழல் செய்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த செய்தி ஊடகங்களிலும் பத்திரிகைகள் வாயிலாகவும் மக்களுக்கு தெரிய வந்த நிலையில், அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து கடுமையான விமர்சனத்தை பதிவு செய்தார். இந்த நிறுவனம் தொடர்ந்து பல மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் 2021ல் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன், அப்போதைய டிஎன்சிஎஸ்சி நிர்வாக இயக்குனர், ஆட்சி பொறுப்பாளர்களின் பார்வைக்கு, டிரான்ஸ்போர்ட் டெண்டரில் நடந்த ஊழல்களையும் அதனால் ஏற்பட்ட இழப்பையும் கொண்டு சென்றார்.

அதனால் திருச்செங்கோட்டை சேர்ந்த 3 நிறுவனங்களின் ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆகவே 2021 முதல் தற்போது வரை சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் லாரி டெண்டர்கள் முறையாக நடந்தது.

இந்த ஆண்டு டெண்டருக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் ஆன்லைன் மூலம் மாவட்டம் வாரியாக கோரப்பட்டது. இதில் பல்வேறு முன்னனி நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

இதில் திருச்செங்கோட்டை சேர்ந்த நிறுவனம் ஏற்கனவே உள்ள பழைய நிறுவனங்களின் பெயர்களிலும் பல போலி பெயர்களிலும் கலந்து கொண்டுள்ளது. இந்த டெண்டரில் திருச்செங்கோட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கிடைக்க ஏதுவாக தற்போது உள்ள டிஎன்சிஎஸ்சி அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், மற்ற டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களை சொற்ப காரணம் காட்டி முதல் சுற்றிலேயே நிராகரித்து வருகின்றனர்.

ஆகவே, தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களிலும், திருச்செங்கோட்டை சேர்ந்த 3 புதிய நிறுவனங்கள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற செய்துள்ளனர். இந்த 3 நிறுவனங்களும் அரசு கோரிய தொகையை விட பல மடங்கு கூடுதல் விலைப் புள்ளி கோரி உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த மூன்று நிறுவனங்களுக்கு மட்டுமே டெண்டர் வழங்கும் பட்சத்தில், சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசனுக்கு, 2019 ஆண்டு முதல் 2021 வரை நடந்த நிதி இழப்பை விட கூடுதல் இழப்பு ஏற்படும்.

இதன் மூலம் டிஎன்சிஎஸ்சி நிறுவனம் திவால் ஆகும் வாய்ப்பு இருப்பதாக அத்துறையை சார்ந்த அதிகாரிகளே மிக மனவேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதை துறையின் அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் இந்த டெண்டர் விவகாரத்தில் தலையிட்டு, டெண்டர் போட்டுள்ள அனைத்து நிறுவனவங்களையும் அழைத்துப் பேசி, நியாயமான வாடகையில், தகுதியான அனைவருக்கும் டெண்டர் வழங்க வேண்டும்.

அதைவிடுத்து, திருச்செங்கோட்டை சேர்ந்த 3 நிறுவனங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் வழங்கும் பட்சத்தில் அனைத்து டிரான்ஸ்போர்ட்டர்களும் ஒன்றிணைந்து கோர்ட்டில் வழக்கு தொடர்வது என்றும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்