Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மூளை முடக்குவாத நாளாக இன்று அனுசரிப்பு

அக்டோபர் 06, 2023 11:14

நாமக்கல்: உலக மக்கள் தொகையில் 2% குழந்தைகள்  மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு ஏதேனும்  ஒரு வகையில் உடலாலும், உள்ளத்தாலும் குறைபாடு அடைந்து அதனால் அவர்கள் தங்கள் வாழ்நாளைக் கடத்த பல வேதனைகளை அனுபவித்து வருகின்றனர்.

இதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் இவர்களில் 20% பேர் ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்தியாவில் மட்டும் சராசரியாக 25 இலட்சத்துக்கும் அதிகமானோர் மூளை முடக்குவாததால் பாதிக்கப்பட்டு  இவர்களில் சில பிரிவினர் தங்களது வேதனைகளைக் கூட பிறரிடம் சொல்லி அழவும், வழிதேடவும் அவர்களுக்கே நாம் என்ன செய்கி றோம் எங்கு இருக்கிறோம் என்று கூட தெரியாமல் திக்கற்ற நிலைக்கு தள்ளப்பட்டு தங்களது வாழ்வில் மிகப்பெரிய சவால்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

அதனால் தான் இந்த  மூளை நரம்பியல் பிரச்சினை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 6 ஆம் தேதி மூளை முடக்கு வாதம் தினம் அனுசரிக்கப்படுகிறது.  இந்த  மூளைமுடக்கு வாதம் தினம் அவர்களது குடும்பத்தினரின் புரிதலை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கான ஆதரவை வழங்குவதற்கும், மற்றும் அவர்களின் சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
மூளை முடக்கு வாதம் என்பது நோய் அல்ல அது ஒரு குறைபாடு.

அது குழந்தை பருவத்தில் தொடங்கி உடல் இயக்கம், தசையின் செயல் அதன் ஒருங்கிணைப்பு மற்றும் சமநிலையை பாதிக்கும் நிரந்திர  பிரச்சனையாகும்.

மூளை முடக்குவாதம்  லேசானது முதல் கடுமையானது வரை பல்வேறு வடிவங்களில் வெளிப்படும், மேலும் பேச்சு பாதிப்பு, பார்வை பாதிப்பு, வலிப்பு மற்றும் அறிவுசார் குறைபாடு ஆகிய பிரச்சனைகளும் இதனுடன் சேர்ந்து வரும்.

காரணங்களும் மறுவாழ்வுசிகிச்சையும் மூளை முடக்குவாதம் மரபணுவினாலோ, பிறப்பிற்கு முன்  பிறப்பின்போதோ, பிறந்த பிறகோ ஏற்படும் மாற்றங்கள், தாயின் கருவில் ஏற்படும் மாற்றங்கள். தாய்க்கு ஏற்படும் தொற்று நோய்கள், தாய் கர்ப்பிணியாக இருக்கும்போது இருந்த கெட்ட பழக்க வழக்கங் கள், சிகரெட் பிடித்தல், சாராயம் குடித்தல், அடிக் கடி கருத்தடை மாத்திரை பயன்படுத்துவது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.

அதேபோல மூளை முடக்குவாதத்தால் பாதித்த குழந்தையின்  பெற்றோர்களும் பல கோணங்களில் சிரமங்களையும், கஷ்டங்களையும் அனுபவிக்கிறார்கள். சமூகத்தில் பல இன்னல்களை கடக்கிறார்கள்.

ஆகவே தான் அதை நிவர்த்தி செய்வதற்கும், தங்களது வேலையை தானே செய்து கொள்வதற்க்கும் தங்களது வாழ்வாதாரத்தை தானே ஏற்படுத்தி கொள்வதற்கும் ஏற்படுத்தியதுதான் மறுவாழ்வு சிகிச்சை முறையாகும்.

இதில் மிக முக்கியமாக பிசியோதெரபி மருத்துவசிகிச்சை  அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த தேவைப்படுகிறது அதேபோல பேச்சு பயிற்சி. ஆக்குபேஷனல் தெரபி பயிற்சி, முடநீக்கு சாதனங்கள் பொருத்துதல், உளவியல் ஆலோசனைகள் தொழில்பயிற்சி, சிறப்புக்கல்வி, ஆரம்ப கால பயிற்சி, சமுதாயம் சார்ந்த மறுவாழ்வு பயிற்சி ஆகிய மறுவாழ்வுகள் மூளை முடக்குவாததால் பாதிக்கப்பட்டவருக்கு வரப் பிரசாதம். கல்வி ரீதியாக பார்த்தோம் என்றால் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு சிறப்பு கல்வி மூலமும் அவர்களுக்கு கல்வி கற்பிக்க செய்யலாம்.
மூளை முடக்குவாதம் தினத்தின் முதன்மை நோக்கங்களில் ஒன்று, சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் மூளை முடக்கு வாதம் உடைய நபர்களைப் பல செயல்பாடுகளில் பங்கேற்க செய்வதில் ஊக்குவிப்பதாகும்.  

கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் சம வாய்ப்புகளைப் பெறுவது இதில் அடங்கும்.  மூளை முடக்கு வாதம் பாதிக்கபட்டவர்களை சுற்றியுள்ள களங்கங்கள் மற்றும் தவறான எண்ணங்களை மாற்றுவதன் மூலம், அவர்களின் இயலாமைக்கு அப்பால் பார்க்கவும், அவர்களின் திறன்கள், திறமைகளில் கவனம் செலுத்தவும் இந்த நாள் மக்களை ஊக்குவிக்கிறது.

மூளை முடக்கு வாதம் உடையவர்களின் சாதனைகளைக் கொண்டாடுவதற்கான ஒரு தளத்தையும்  இந்த நாள் வழங்குகிறது.  இது அவர்களின் பின்னடைவு, உறுதிப்பாடு மற்றும் வெற்றிக் கதைகளை எடுத்துக்காட்டுகிறது.

மூளை முடக்கு வாததுடன் இருப்பது  ஒருவரின்  திறன்களை வரையறுக்காது அல்லது அவர்களின் திறனைக் கட்டுப்படுத்தாது என்பதை நிரூபிக்கிறது.  கலை நிகழ்ச்சிகள், தடகள நிகழ்வுகள் மற்றும் கண்காட்சிகள் மூளை முடக்கு வாதம் உடைய ஒருவரின் திறமைகள் மற்றும் திறன்களை வெளிப்படுத்த ஏற்பாடு செய்யப்படுகின்றன, அவர்களின் பங்களிப்புகள் மதிப்புமிக்கவை மற்றும் வேறுபட்டவை என்பதை சமூகத்திற்கு நினைவூட்டுகின்றன.

மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கபட்டவரை ஆதரிப்பதில்  அவரின் குடும்பங்களின் பங்கை அங்கீகரிக்கிறது.  அனுபவங்கள், வளங்கள் மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள குடும்பங்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் ஆதரவு கரங்களை  இணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.  அன்புக்குரியவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் ஆதரவு அமைப்பை உருவாக்க உதவுகிறது.

மூளை முடக்கு வாதத்துடன் வாழ்பவர்களின் சவால்கள் மற்றும் சாதனைகளைப் பற்றி சமூகத்திற்குக் கற்பிப்பதன் மூலம், ஒவ்வொருவரும் தங்கள் திறன்களைப் பொருட்படுத்தாமல் செழிக்கக்கூடிய ஒரு உள்ளடக்கிய உலகத்தை நாம் உருவாக்க முடியும்.

எனவே, மூளை முடக்கு வாததிடன் வாழும் நபர்களின் குறிப்பிடத்தக்க திறன்களை புரிந்துகொள்வதன் மூலமும், ஆதரவை வழங்குவதன் மூலமும், உடல் அங்கங்களில் ஏற்படும் குறை ஒரு குறை அல்ல அவர்களிடம் இருக்கும் திறமை ஆளுமை ஆகியவை பயன் படுத்தி மாற்றுத்திறனை வளர்ப்பதற்கு ஒரு தூண்டும் சக்தியாக சமுதாயமே குடும்பமோ, அரசாங்கமே இருக்க வேண்டும் என்பதும், அவர்களை உரிமைகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும் என்பதை சிறப்பித்துக் காட்டுவதன் மூலமும் மூளை முடக்கு வாதம் தினத்தை கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்