Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாவட்டங்களுக்கு இடையேயான இளையோர் தடகளப் போட்டி

செப்டம்பர் 13, 2023 05:49

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வருகின்ற 14 ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு, தமிழ்நாடு மாவட்டங்களுக்கு இடையிலான, 5,300 பேர் பங்கேற்கும் இளையோர் ஆடவர் மற்றும் மகளிர் தடகளப் போட்டிகள் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது.

இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் தென்மணடல விளையாட்டு போட்டிகளில் விளையாட தகுதி பெறுவார்கள் என நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட தடகள சங்க தலைவருமான சின்ராஜ் தெரிவித்துள்ளார். 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மாவட்ட தடகள சங்கம் திருச்செங்கோடு கே.எஸ்ஆர் கல்வி நிறுவன ஒத்துழைப்புடன் நடத்தும் 37 வது மாவட்டங்களுக்கு இடையேயான  தடகளப்போட்டிகள் வரும் 14 ஆம் தேதி முதல் 17 ம் தேதி வரை நடக்க உள்ளது. இது தொடர்பான செய்தியாளர்கள் கூட்டம் கே.எஸ்.ஆர் கல்லூரியில்  நடைபெற்றது.  

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட தடகள சங்க தலைவருமான  ஏகேபி சின்ராஜ், செய்தியாளரிடம் கூறியதாவது, வருகின்ற 14 ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு  மாவட்டங்களுக்கு இடையேயான இளையோர் தடகளப் போட்டிகள் 14, 16 , 18, 20 ஆகிய நான்கு பிரிவுகளில் நடைபெற உள்ளது.

இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 5,300 வீரர் வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர். தொடக்க விழா நிகழ்ச்சிகள் 14 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கும் இதில் முன்னாள் காவல்துறை தலைவர் தேவாரம், உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ளனர். 

இந்த போட்டியில் மொத்தம் 40 வகையான தடகள போட்டிகள் இடம் பெறும். இதற்காக, மூன்று மாதங்கள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சர்வதேச தரத்தில் கல்லூரி வளாகத்தில் ஆடுகளம் தயார் செய்யப்பட்டுள்ளது. போட்டியில் கலந்து கொண்டு விளையாடும் வீரர் வீராங்கனைகள் மற்றும் நடுவர்கள் பெற்றோர் பொதுமக்கள் ஆகியோருக்கு உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே அனைவரும் இந்த போட்டிகளை பார்த்து பயன்பெறுமாறும் கேட்டுக் கொண்டார். மேலும் கூறிய நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் தென் மண்டல மற்றும் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் தடகள போட்டிக்கு விளையாட தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தடகள போட்டிகளில், பெரும் அளவிலான சாதனைகளை முறியடிக்கும் வகையில், வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடுவார்கள். 

 இதில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் ஒட்டுமொத்தமாக சேம்பியன்ஷிப், ஒன்று முதல் 6 வரை இடம் பிடிப்பவர்களுக்கான பரிசுகள், தனித் திறன் பரிசுகள் ஆடவர் 4 பேருக்கும், மகளிர் 4 பேருக்கும் வழங்கப்படும் என்றும் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினரும் நாமக்கல் மாவட்ட தடகள சங்க தலைவர் மாநகர ஏ.கே.பி.சின்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் முதன்மை அலுவலர் தியாகராஜா, நாமக்கல் மாவட்ட தடகள சங்க நிர்வாகி, கல்லூரி உடற்கல்வி இயக்குநர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முத்துகண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்