Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் 120 சிலைகள் பிரதிஷ்டை

செப்டம்பர் 05, 2023 12:57

நாமக்கல்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் 120 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் முழுவதும், 120 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பு வழிபாடு நடத்துவதென்று இந்து முன்னணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடு முழுவதும் வருகிற 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. வடமாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்த விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிகள் இப்போது தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் நடந்து வருகிறது. பொதுவாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூன்றாவது நாள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது உண்டு.

அந்த வகையில் நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் தர்மதுரை தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பொதுச்செயலாளர் கோபிநாதன், செயலாளர்கள் ஜெகதீசன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் அண்ணாதுரை கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

கூட்டத்தில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அன்னை தமிழை காக்க, ஆன்மீகத்தை வளர்ப்போம் என்ற வாசகத்துடன், மாவட்டம் முழுவதும், 120 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பாக வழிபாடுகள் நடத்துவதென்றும், பின்னர் ஊர்வலம் நடத்துவதென்றும், அனைத்து ஒன்றியத்திலும், பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழாவை, இந்து ஒற்றுமை எழுச்சி விழாவாக இந்துக்கள் கொண்டாட வேண்டும். வீட்டுக்கு ஒரு விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் என்பது உள்பட மேலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜசேகர், ரமேஷ், முத்துக்குமரன், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்