Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி  மாவட்ட ஆட்சியர் ச.உமா, கவிஞர் அறிவுமதி பங்கேற்பு

ஆகஸ்டு 11, 2023 12:07

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான 03.02.2023 அன்று தொடங்கப்பட்டு 24.04.2023 வரை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 1 இலட்சம் மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் 100 இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டன. 

மேலும் இதில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற 100-வது நிகழ்ச்சியில் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்நிகழ்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 200 கல்லூரிகளில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ பரப்புரைத் திட்டம் நிகழ்த்தத் திட்டமிடப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் 1.5 லட்சம் மாணவர்களைச் சென்றடைவதே திட்டத்தின் இலக்காகும். பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் 50-க்கும் மேற்பட்ட ஆளுமைகளைக் கொண்டு, 200 சொற்பொழிவுகளை நடத்தி முடிக்க செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரப்புரையின் தொடர்ச்சியாக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா நோக்க உரையாற்றினார். மேலும், ”குறிஞ்சித் தமிழ்” என்னும் பொருண்மையில் கவிஞர் அறிவுமதி கருத்துகளை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு உதவும் வகையில், ‘நான் முதல்வன்’, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்டத் தொழில் மையம், தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை மையம், மகளிர் சுய உதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருட்கள் போன்ற அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதை  மாணவர்கள் பார்வையிட்டனர். மேலும், பங்கேற்ற  மாணவர்களுக்கு “உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி”, “தமிழ்ப் பெருமிதம்” ஆகிய இரு கையேடுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சொற்பொழிவுகளை வழங்கிய மாணவ, மாணவியர்களுக்கு கேள்விகளை எழுப்பிய மாணவ, மாணவியர்களுக்கும் பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் என்.முருகேசன், உதவி ஆணையர் (தொழிலாளர் நலத்துறை) எல்.திருநந்தன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏரளாமான கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்