Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஜுலை 22, 2023 01:34

நாமக்கல்: ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ் பஞ்சாங்கத்தின்படி ஆடி என்பது, நான்காவது மாதம். ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் துவக்கத்தையும் ஆடி மாதம் உணர்த்துகிறது. ஆன்மீக நடவடிக்கைகளுக்கு இது மிகவும் முக்கியமான மாதமாகும்.

மேலும், ஆடி மாதத்தில் சக்தி தேவியை பல்வேறு வடிவங்களில் வழிபடுவது மங்களகரமானது என்பது ஐதீகம். ஆடி மாதத்தில், ஆடி செவ்வாய், ஆடி ஞாயிறு மற்றும் ஆடி வெள்ளி போன்ற நாட்களில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த வெள்ளிக்கிழமைகள், பல்வேறு இந்து பெண் தெய்வங்களின் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.

மேலும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நாமக்கல் அருள்மிகு நாமகிரி அம்மன், பலபட்டரை மாரியம்மன், ஏகாம்பர காமாட்சியம்மன், முல்லை நகர் துர்க்கை அம்மன் உள்ளிட்ட கோயில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

தொடர்ந்து வளையல் அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பூஜையில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கூழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் நாமக்கல் மாவட்டம், மோகனூர் சுப்பிரமணியபுரத்தில் காமாட்சியம்மன், முத்துக்குமார் சுவாமி ஆலயம் உள்ளது. இங்கு, துர்க்கை அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, துர்க்கை அம்மனுக்கு, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. 

அதையடுத்து தொடர்ந்து, தங்கக் கவசம் சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதையடுத்து, மூலவர் காமாட்சி அம்மன், சந்தனகாப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

தலைப்புச்செய்திகள்