Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எங்கள் தாத்தா செங்கோலை செய்து கொடுத்து பெருமை தேடி தந்துள்ளார்: உம்மிடி பங்காரு உரிமையாளர்கள்

மே 27, 2023 09:04

சென்னை: இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடம் நாளை திறக்கப்பட இருக்கிறது. இங்கு செங்கோல் ஒன்று பிரதானமான இடத்தில் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் திறப்பு விழாவில், மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அடுத்ததாக தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி நிறுவுவார்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் 1947-ல் அது வழங்கப்பட்டது. ஆங்கிலேயர்களிடமிருந்து நம் நாட்டு மக்களுக்கு அதிகாரம் மாறியதற்கான அறிகுறியாகவும், தமிழ்நாட்டின் ஆதினம் மூலம் இது வழங்கப்பட்டது" என்றார்.

இதையடுத்து சென்னை ராஜ்பவனில் மத்திய நிதியமச்சர் நிர்மலா சீதாராமன்,  செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:  நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அப்போது, சுதந்திரம் கிடைத்தபோது நடைபெற்ற முக்கியமான சம்பவம் நினைவுகூறப்படுகிறது. வெள்ளையர்களிடம் இருந்த ஆளுமை, நம் நாட்டு மக்களுக்கு கிடைத்தபோது, அந்த ஆளுமைப் பரிமாற்றத்தை எப்படி மேற்கொண்டார்கள் என்பதை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சி அது.

ஆட்சி மாற்றத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று வெள்ளையர்கள் கேட்டுள்ளனர். அப்போது பிரதமர் நேரு, இதுகுறித்து ராஜாஜியுடன் ஆலோசித்தார். பின்னர் ராஜாஜி, பல்வேறு ஆதீனங்களுடன் ஆலோசித்து, திருவாவடுதுறை ஆதீனம் மூலம் ‘தர்ம தண்டம்’ எனப்படும் செங்கோலை உருவாக்கியுள்ளனர்.
 அந்த செங்கோல்  உம்மிடி பங்காரு செட்டி குடும்பத்தினரால் அப்போது சென்னையில் செய்யப்பட்டது. இந்த தங்க செங்கோலில் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. இதன் அப்போதைய மதிப்பு ₹15,000 ஆகும். இந்த செங்கோல் நேருவிடம் ஒப்படைக்கும் போது, சிவனின் ஆசீர்வாதத்தை வழங்கும் விதமாக தேவாரத்திலிருந்து 11 பாடல்கள் ஓதப்பட்டது.

அந்த செங்கோலை உருவாக்கிய உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இருவரும் இன்றும் நலமுடன் உள்ளனர். அவர்களையும், புதிய கட்டிடத்தைக் கட்டிய தொழிலாளர்களையும் பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் பாராட்டுகிறார்.
இந்த செங்கோலைக் கண்டுபிடிக்க வேண்டுமென பத்மா சுப்பிரமணியம் வலியுறுத்தினார். இதையடுத்து, செங்கோல் குறித்த உண்மைத் தகவல்களைச் சேகரிக்குமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டார். அதன் பின்னர்தான், அலகாபாத்தில் உள்ள ஆனந்தபவன் அருங்காட்சியகத்தில் செங்கோல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வரும் 28-ம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் திறப்பு விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த 20 ஆதீன குருமார்கள் மற்றும் ஓதுவார்கள் பங்கேற்று, தேவாரம் பாடுகின்றனர். 1947-ல் கொடுக்கப்பட்ட செங்கோலை, மக்களவையில் சபாநாயகரின் அருகில் மரியாதைக்குரிய ஸ்தானத்தில் பிரதமர் வைக்கிறார். நல்லபடியாக, நேர்மையாக ஆட்சி நடத்த வேண்டும் என்று ஆசீர்வதித்து கொடுக்கப்பட்ட செங்கோல் அது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.  இதையடுத்து உம்மிடி பங்காரு உரிமையாளர்கள் நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு செல்லும் முன்பு செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, செங்கோலை தயாரிக்கும் வம்சாவளியை சேர்ந்த உம்மிடி அமரேந்தர் கூறியதாவது: செங்கோல் எங்கள் குடும்பத்தின் சொத்து. என்னுடைய தாத்தாவின் உழைப்பு இன்று எங்களுக்கு பெருமையை தேடிக் கொடுத்துள்ளது. இந்த செங்கோலின் பெருமையை கேள்விப்பட்டு புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இது இருக்க வேண்டும் என பிரதமர் விரும்புகிறார். இது போன்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது எங்கள் குடும்பத்திற்கு மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறோம். இதுகுறித்த வரலாறு தொலைந்து போயிருந்தது.

செய்தித்தாளில் வந்த தகவலின் அடிப்படையில் தான், செங்கோலின் அசல் அலகாபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு அருங்காட்சியகத்தில் உள்ளது தெரியவந்தது. அந்த அசல் அளவுகளை கணக்கிட்டு அது போன்ற மாதிரியை உருவாக்கி உள்ளோம்.
எங்களது குடும்பம் தயாரித்த பாரம்பரிய பொருட்களை சென்னை அண்ணா நகரில் உள்ள கிளைக் கடையில் காட்சிப்படுத்தினோம். என்னுடைய 96 வயதாகும் பெரியப்பா எத்திராஜ் செட்டியார் செங்கோலின் வரலாறு பற்றி விவரித்தார்.

நீதிக்கு நந்தியும் செல்வ செழிப்பிற்கு லட்சுமியின் உருவமும், கீழ் இருந்து மேல்நோக்கி கொடி போன்று பொறிக்கப்பட்டுள்ளது. செங்கோலில் இடம்பெற்றுள்ள நந்தி, லட்சுமி ஆகியோரின் உருவங்களும், தமிழ் வரிகளும், இறைவனின் அருள் ஆட்சியாளர்களை வழிநடத்தும் என்பதைக் குறிக்கிறது. 3 கிலோ தங்கத்தால் 5 அடி உயரத்தில் இந்த செங்கோல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று செங்கோல் யாருக்கும் செய்து கொடுக்கும்படியான எண்ணம் இல்லை. அதே நேரத்தில் அரசு சார்பில் இதுபோன்று செங்கோல் வேண்டும் என்று கேட்கும் பட்சத்தில் அரசுக்கு மட்டுமே செய்து கொடுக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு உம்மிடி அமரேந்தர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்