Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அகில இந்திய நீச்சல் சம்மேளனத்தின் தலைவர் ஜெயபிரகாஷ் 2வது முறையாக தேர்வு

மே 22, 2023 01:55

சென்னை: சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர்.என்.ஜெயபிரகாஷ் நீச்சல் சம்மேளனத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை, இந்திய நீச்சல் சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அடுத்த 4 ஆண்டுக்கான (2023-27) புதிய நிர்வாகிகள் அனைவரும் ஒரு மனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

இதன்படி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர்.என்.ஜெயபிரகாஷ் நீச்சல் சம்மேளனத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக மோனல் சோக்ஷி, பொருளாளராக சுதேஷ் நக்வெங்கர், துணைத்தலைவர்களாக ராஜ்குமார், அனில் வியாஸ், சதீஷ்குமார், பாஸ்கர் தாஸ், அனில் கட்ரி, இணைச்செயலாளர்களாக சீமா மெரோத்ரா, முரளீதரன், லோகேஷ்வர் சிங், லட்சுமி சந்திர மஹாகுர் ஆகியோர் தேர்வானார்கள்.

பின்னர் இந்திய நீச்சல் சம்மேளன தலைவர் ஜெயபிரகாஷ் நிருபர்களிடம் கூறுகையில், 'தொடர்ந்து 2-வது முறையாக தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டது கவுரவமாகும். எனது முதலாவது பதவி காலத்தில் நீச்சல் போட்டி மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கண்டிருப்பதை பெருமையோடு குறிப்பிடுகிறேன்.

வாட்டர் போலோ, டைவிங் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சர்வதேச பயிற்சியாளர்களைக் கொண்டு போட்டியாளர்கள் உருவாக்கப்படுவார்கள். மேலும்  தமிழகத்தில் தற்போது 30 நீச்சல் குளங்கள் உள்ளது, அதில் நான்கு சர்வதேச போட்டியாளர்கள் பயிற்சி பெறும் தரத்தில் உள்ளது.  தற்போது அனைத்து நீச்சல் குளங்களில் பயிற்சியாளர்களை நியமிக்கப்படவுள்ளனர். இந்தியா முழுவதும் 20000 நீச்சல் போட்டியாளர்கள் உள்ளனர். ஆனால்; அடுத்த நான்கு ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கு மேலானவர்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு வரலாற்று சாதனையாக இரு இந்திய நீச்சல் வீரர்கள் (சஜன் பிரகாஷ் மற்றும் ஸ்ரீஹரி நடராஜ்) உயரிய தரத்தோடு தகுதி பெற்றதை பார்த்தோம். நீச்சல் போட்டியின் வளர்ச்சிக்காக நாங்கள் நிறைய விஷயங்களை செய்துள்ளோம். வரும் ஆண்டுகளில் நீச்சலில் உலக அளவில் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதை நோக்கி பயணிப்பதாக நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்