Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராசிபுரத்தில் விழிப்புணர்வு  மாரத்தான். 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு...

மார்ச் 27, 2023 01:07

ராசிபுரம்:  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்    வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியின் சார்பில், விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.  போக்குவரத்து சாலை பாதுகாப்பு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை குறித்தும் 5 கி.மீ தொலைவிற்கு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. 

விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை வெற்றி விகாஸ் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் குணசேகரன், மற்றும் பள்ளியின் தலைவர் டாக்டர் ஜி. வெற்றிச்செல்வன் ஆகியோர்  கொடியசைத்துத்  துவக்கி வைத்தனர்.


போட்டியில் தனியார் பள்ளியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

 மாரத்தான் போட்டியானது சேந்தமங்கலம் பிரிவு சாலையில் தொடங்கி கோனேரிப்பட்டி, புதிய பேருந்து நிலையம்,பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் இறுதியாக கவுண்டம்பாளையம் பகுதியில் பள்ளியை சென்று அடைந்தது. முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசு, பதக்கங்கள், கோப்பைகள், பாராட்டு சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்பட்டன. 


வெற்றி விகாஸ் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர்  குணசேகரன்  விழாவிற்கு தலைமை ஏற்றார். அவர் தனது பாராட்டு உரையில் மாணவ, மாணவிகளுக்கு கல்வியும், உடல் நலனும் இரண்டு கண்கள் போன்றவை .கல்வியோடு உடல் நலத்தை பேணுவதிலும் மாணவ சமுதாயம் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதற்கு ஏற்ப மாணவர்களின் எல்லா வெற்றிகளுக்கும் அவர்களின் உடல்நலம் முதன்மை காரணமாக திகழும் என்பதை உணர்த்தும் விதமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், தினசரி சாலைகளில் பயணங்கள் மேற்கொள்ளும் போது கடைபிடிக்க வேண்டிய போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை இளம் வயதிலேயே மாணவ சமுதாயத்திற்கு எடுத்துரைப்பதற்காகவும் இவ் வகையான மாரத்தான் போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி நடத்தி வருகிறது. 


இது பள்ளி நடத்தும் மூன்றாவது மாரத்தான் போட்டியாகும். இவ்வகையான மாரத்தான் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் மாணவர் சமுதாயத்திற்கிடையே  ஒற்றுமை மனப்பான்மை ஓங்கும், போக்குவரத்து சார்ந்த விழிப்புணர்வு பரவும்.அவர்களின் வாழ்வில் நீங்காத ஒரு சுகமான அனுபவமாக இது அமையும் என்றார்.


இந்த மாரத்தான் போட்டியில் மாணவர் பிரிவில் நவீன் குமார் என்பவர் 15 நிமிடம் 50 நொடிகளில் இலக்கை அடைந்து முதல் பரிசினை வென்றார். விமல் ஜே இரண்டாம் பரிசினையும் நவீன் எஸ் மூன்றாம் பரிசினையும் பெற்றனர்.

மாணவிகள் பிரிவில் என் ராகினி என்ற மாணவி 19 நிமிடம் 34 நொடிகளில் இலக்கை அடைந்து முதல் பரிசினை வென்றார். சகிந்தா எஸ் இரண்டாம் பரிசினையும், ஜோனிகா மூன்றாம் பரிசினையும் வென்றனர்.


போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் போட்டியில் பங்கேற்றதற்கான பங்கேற்பு  சான்றிதழ்கள் வழங்கப்பட்டன‌.

தலைப்புச்செய்திகள்