Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாபெரும் புத்தகத் திருவிழாவில் 

மார்ச் 14, 2023 05:22

மாபெரும் புத்தகத் திருவிழாவில் ரூ. 1 கோடி மதிப்பில் புத்தகங்கள் விற்பனை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் பாராட்டு.
நாமக்கல், தமிழ்நாடு அரசு சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக நடைபெற்ற மாபெரும் புத்தகத் திருவிழா நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (வடக்கு) கடந்த 28.02.2023 அன்று தொடங்கி 12.03.2023 வரை சிறப்பாக நடைபெற்றது.

 இப்புத்தகத்திருவிழாவில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, பாவலர் அறிவுமதி, மருத்துவர் கோ.சிவராமன், பாரதி கிருஷ்ணகுமார், த.ஸ்டாலின் குணசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, டாக்டர் அ.கலியமூர்த்தி, கலைபண்பாட்டுத்துறை இயக்குநர் எஸ்.ஆர்.காந்தி ஆகியோரின் சொற்பொழிவுகளும், முனைவர் கு.ஞானசம்பந்தன், முனைவர் அரசு பரமேசுவரன் ஆகியோரின் பட்டிமன்றங்களும் சிறப்பாக நடைபெற்றன. இப்புத்தகத் திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி, கவிதைப் போட்டி, மாறுவேடப் போட்டி, படம் பார்த்து கதை சொல், ஒரு வார்த்தை ஒரு புத்தகம், ஓவியப் போட்டி, வினாடி வினா, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 


மேலும் இப்புத்தகத் திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளையும், நாட்டுப்புற கலைஞர்களின், கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தெருக்கூத்து, பரத நாட்டியம், பொய்க்கால் குதிரை ஆட்டம், வள்ளிக்கும்மி, தப்பாட்டம், வில்லாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளையும் பொதுமக்கள ஆர்வத்துடன் கண்டுக் களித்தனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் தினசரி நடைபெற்ற விழாவில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. 


இப்புத்தகத் திருவிழாவில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மருத்துவ முகாமில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பள்ளி சிறார் பரிசோதனை, மார்பக பரிசோதனை, கண் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டார்கள். இம்மாபெரும் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த வண்ண மீன்கள் காட்சியகம், அறிவியல் கோளரங்கம், வானியல் தொலைநோக்கி, மெய் நிகர் கருவி (Virtual library), தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சாலை விழிப்புணர்வு வாகனம் மற்றும் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை சுமார் 26 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.

மேலும் தினசரி 15 ஆயிரம் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
72 தனியார் அரங்குகளும், 13 அரசுத்துறை அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்களின் வரவேற்பை அடுத்து 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டு 12.03.2023 அன்று வரை நடைபெற்ற புத்தகத் திருவிழாவில்  ரூ. 1 கோடி ரூபாய் அளவில் புத்தகங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக நடைபெற்ற புத்தகத் திருவிழா சிறப்பாக ஒருங்கிணைத்த அனைத்து அரசு அலுவலர்களுக்கும் பேராதரவு நல்கிய பொதுமக்கள், புத்தக ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவ, மாணவிகள் நன்கொடை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைப்புச்செய்திகள்