Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெண்ணியம் போற்றுவோம்: கண்ணியம் போற்றுவோம்

மார்ச் 12, 2023 03:21

இந்த பூமியில் போற்றுதலுக்கு உரிய காருண்யக் கடவுள் உண்டெனில், அது நிச்சயம் பெண்ணை மட்டுமே சேரும். காரணம், கண்ணுக்கு அப்பால் இருந்து சிருஷ்டிக்கும் கடவுளைவிட, சிருஷ்டிக்கப்பட்ட உயிர்களுக்கு தினமும் உணவு கொடுத்து, உயிர் காக்கும் நடமாடும் பெண் தெய்வங்களாக போற்றப்படும் தகுதி பெண்களுக்கு மட்டுமே உண்டு.

ஆனால், இதுதான் உண்மையா? அப்படித்தான் கொண்டாடுகிறோமா? நிச்சயம் இல்லை. மனிதன் சமூக விலங்காகிவிட்ட நிலையில், இந்த சமூகத்தில் பெண்ணியத்தின் பங்களிப்பு உள்ளதை என்பதை ஒவ்வொரு குடும்பத்திலும் எண்ணிப் பார்க்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். 

காரணம், ஒரு நாளின் 24 மணி நேரத்திலும் பெண்களின் பங்களிப்பு, ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இந்தக் காலகட்டத்தில், மார்ச் 8ம் தேதி வந்துவிட்டால், சர்வதேச பெண்கள் தினம் என்று சமூக வலைத்தளங்களும், வெற்றிப் பெண்களின் கதைகளும் அதகளமாகிறது. 

ஆனால், மார்ச் 9ம் தேதியும், 10ம் தேதியும், அதற்கு முந்தைய 6 மற்றும் 7ம் தேதிகளும் கொண்டாட்டத்துக்கு அப்பாற்பட்டவையா? முதலாம் உலகப்போர் மூண்டபோது, 1913 –14 களில், ரஷ்யாவின் பெண்கள் போருக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் பேரணி நடத்தினர். மார்ச் 8ம் தேதி பெண்கள் நடத்திய பேரணியை வலியுறுத்தும் வகையில், மேற்கு நாடுகளில் கொண்டாடப்பட்ட பெண்கள் தினம், அப்படியே இந்தியாவுக்குள் ஊடுருவியது. இப்போது, உலக பெண்கள் தினமாக நம் மக்களாளும் கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்தத் தகவல்கள் முற்றிலும் தவறானவை. 

உண்மை என்னவென்றால் 1965 மார்ச் 8ல், இது தொடர்பாக சோவியத் யூனியன் ஒரு சட்டம் கொண்டு வந்தது. இதன் பின்னர் ஐரோப்பியர்கள் இதில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதுதான் வரலாறு. 
ஆனால், உண்மை என்ன? உலகம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறிய காலகட்டத்துக்கு முன்னதாக, இந்தியா பெண்களுக்கு மிகப் பெரிய அளவில் அங்கீகாரம் கொடுத்திருந்தது. மேற்காசியாவின் முஸ்லிம்கள் மற்றும் ஐரோப்பாவின் கிறிஸ்தவர்கள் படையெடுப்புக்கு முன்னதாக, இந்தியாவில் பெண்கள் நிலை மிகச் சிறப்பாகவே இருந்திருக்கிறது.
ஒவ்வொரு குடும்ப வாழ்க்கை முறையிலும், பெண்கள் பாட்டியாக, தாயாகி, தங்கையாக, தமக்கையாக, அண்ணியாக, மாமியாராக, உற்ற தோழியாக, குடும்பத்தின் தலைவியாக, ஆலோசகராக, சிறந்த நிதி அமைச்சராக, உளவியல் ஆலோசகராக பெண்களின் பங்களிப்பை நித்தமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது நம் இந்திய சமூகம்.

காலத்துக்கு ஏற்றார்போல் கல்வி, வேலை என்று பெண்களின் பரிணாம வளர்ச்சியில் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. இன்று நேற்று அல்ல, நம் இதிகாச காலங்களான ராமாயணம், மகாபாரதம் தொடங்கி பெண்களின் மகத்துவமும், பெண்ணியமும், கண்ணியமும் போற்றப்பட்டு வருகிறது. சிறந்த சிவபக்தனான ராணவன், சீதையை கவர்ந்து சென்றாலும், அசோக வனத்தில் வைத்து, பாதுகாத்துவந்தான். ‘பிறன் மனை நோக்கல் பாவம்’ என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், விதி?

அதேநேரத்தில், முஸ்லிம்கள் படையெடுப்புக்கு பின்னர், இந்தியாவின் பெண்கள் வாழ்க்கை முறையில் பல சிக்கல்கள் ஏற்பட்டது. ராமாயணம், மகாபாரதத்தில் இல்லாத சதி என்ற உடன்கட்டை பழக்கம், இந்தக் காலத்தில் ஏற்பட்டதே. காரணம், படையெடுப்புகளில் சிக்கிய பெண்களை, சீரழித்தனர். இதனால், முஸ்லிம் படையெடுப்புகள் காலத்தில் பெண்கள் தீயில் விழுந்து மாண்டனர். அதேநேரத்தில், பெண்களுக்கு எதிரான சட்டங்கள் என்று இந்தியாவில் எதுவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், பல ஐரோப்பிய யாத்ரீகர்களால் 1750 முதல் 1920 வரை எழுதப்பட்ட குறிப்புகளில், பெண்கள், குழந்தைகள் நலம் பற்றி கொடூரமான, மோசமான வார்த்தைகள் எதுவும் இல்லை. ஆனால், பெண்கள் கொண்டாடப்பட்டதை குறிப்பிட்டுள்ளனர். 

இன்னும் சொல்லப்போனால், நம் அன்னை பாரத மாதா. இந்தியாவில் ஓடும் நதிகளில் பிரம்மபுத்திராவைத் தவிர அனைத்தும் பெண்கள் பெயர் தாங்கிய நதிகளே. மண்ணும், நீரும், மகத்துவமும் பெண்ணாகிப் போற்றப்பட்ட இந்த தேசத்தில், மார்ச் 8 மட்டுமல்ல, ஒவ்வொரு சூரிய உதய நாளும் பெண்கள் தினமே. காரணம், அன்றைய பொழுது காலை சமையல்கட்டில் பெண் நுழைந்தால் மட்டுமே, ஒரு குடும்பத்தின் பசிப்பிணி நீங்கும். இப்படி ஒவ்வொரு நாளும் பசிப்பிணி நீக்கும், ஒவ்வொரு குடும்பத்தின் தலைவிகளுக்கும், அன்னையர்க்கும், ஒவ்வொரு நாளும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். அவனின்றி அணுவும் அசையாது என்பது இறைவனுக்கு சாத்தியம் என்றால், ‘அவளின்றி ஒரு அணுவும் அசையாது’ என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருந்தும். பூலோகத்தின் சிறிஷ்டி கர்த்தாக்களாக உள்ள அவர்களுக்கு மங்கையர் சிகரத்தின் கோடான கோடி நமஸ்காரங்கள்.
 

தலைப்புச்செய்திகள்