Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடையத்தில் விவசாய பொருள்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் திமுக கோரிக்கை

ஜனவரி 27, 2023 08:15

கடையத்தில் விவசாய பொருள்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் எம்.பி., மாவட்டச்செயலரிடம் திமுக கோரிக்கை
கடையம் : கடையத்தில் விவசாய பொருள்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் எம்.பி., மாவட்டச்செயலாரிடம் திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


இது குறித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் எஸ்.கே.மயிலவன், ஞானதிரவியம் எம்பி, திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில், புளியங்குடிக்கு அடுத்த படியாக எலுமிச்சம் பழம் உற்பத்தியில் கடையம் பகுதி விளங்குகிறது. 

இங்குள்ள விவசாயிகள் தங்களது எலுமிச்சைகளை  கடையத்தில் உள்ள கமிஷன் கடைகள் மூலமாகவும், கேரளாவிலிருந்து வரும் வியாபாரிகளிடமும் விற்று வருகின்றனர். 

 
இந்நிலையில் பல நேரங்களில் கஷ்டப்பட்டு விவசாயிகள் விளைவிக்கும் எலுமிச்சம் பழம், கத்தரிக்காய், வெண்டை, தக்காளி  போன்ற பல்வேறு காய்கறிகளுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து மிகவும் நொடிந்த நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் பல்வேறு தற்கொலை சம்பவங்களும் நிறைவேறி உள்ளன. 


இந்நிலையினை போக்கிடவும் விவசாயிகளின் வாழ்வில் ஒளி ஏற்றிடவும் கடையத்தில் விவசாயிகள் விளைவிக்கும் விவசாய பொருட்களை பாதுகாத்து வைக்கும் வகையில், ஒரு குளிர் பதன கிடங்கு அமைத்து தந்தால், அதில் போதிய விலை கிடைக்காத சமயத்தில் விளையும் காய்கனிகளை அந்த குளிர் பதன கிடங்கில் சேமித்து வைத்து , நல்ல விலை கிடைக்கும் பொழுது விற்பனை செய்து விவசாயிகள் லாபம் ஈட்டும் வகையில் அமையும். இதனால் விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள். 


மேலும் தென்காசி பகுதியில் விளைவிக்கும் எலுமிச்சம் பழம் மற்றும் காய்கனிகளை வெளிநாட்டிற்கு விவசாயிகளே நேரடியாக ஏற்றுமதி செய்யும் விதமாக ஒரு ஏற்றுமதி மையத்தை அரசின் சார்பில் விவசாயிகளுக்கு வழிகாட்டும் விதமாக தொடங்கினால் விவசாயிகள் மிகவும் பயனடைவார்கள். 


இதனை தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு எடுத்து சென்று மேற்கண்ட திட்டங்களை பெற்றுத் தர வேண்டுகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.


 மனுவினைப் பெற்றுக் கொண்ட  எம்.பி. மற்றும் மாவட்ட செயலாளர் விவசாயிகள் நலம் காக்கும் இந்த திட்டத்தினை உடனடியாக செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

தலைப்புச்செய்திகள்