Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2020-ம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக...  மும்பையில் கொரோனா பாதிப்பு இல்லை

ஜனவரி 25, 2023 07:45

மும்பை, நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று கடந்த 3 ஆண்டுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றுள்ளது. இவற்றில் முதல் மற்றும் இரண்டாவது அலையில் கொரோனா பரவல் அதிகரித்து இருந்தது.

இதனால், நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இவற்றில் மராட்டியம் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டு நோயாளிகள் எண்ணிக்கையில் முதல் இடம் பிடித்து இருந்தது. மும்பை, நாசிக் நகரங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்தன. இதன்படி, 2020-ம் ஆண்டு மார்ச் 16-ந்தேதி கொரோனா பாதிப்பு பதிவானது.

 தொடர்ந்து தினசரி பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், மும்பை நகரில் 2020-ம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என மும்பை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அவர்கள் 2,772 கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டதில் யாருக்கும் பாதிப்பு இருப்பது பதிவாகவில்லை. அண்டை நாடான சீனாவில் சமீபத்திய கொரோனா பரவலால், இந்தியாவில் மற்றொரு அலை ஏற்பட கூடிய சாத்தியம் பற்றி எதிர்பார்க்கப்பட்ட சூழலில் இந்த முடிவு வெளிவந்து உள்ளது. 

இதற்காக மும்பை பெருநகர மாநகராட்சியின் சுகாதார அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். கடந்த இரண்டரை ஆண்டுகள் தங்களுக்கு சோதனையான ஒன்றாக இருந்தது என கூறியுள்ளனர். நிபுணர்களும் ஒருபுறம் மகிழ்ச்சி வெளிப்படுத்தியபோதும், புதிய வகை பாதிப்புகள் ஏற்படாமல் அதனை தடுக்கும் வகையில் கண்காணிப்புடன் இருக்கும்படியும் பரிந்துரைத்து உள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்