Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விராட் கோலி அதிரடி சதம்: இலங்கை அணிக்கு 374 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

ஜனவரி 11, 2023 11:58

கவுகாத்தி: இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஷூப்மான் கில், கேப்டன் ரோகித் சர்மா ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தனர். ரோகித் சர்மா 83 ரன்களும், ஷூப்மான் கில் 70 ரன்களும் சேர்த்தனர். 3வது வீரராக களமிறங்கிய விராட் கோலியும் அதிரடியில் மிரட்டினார். அவருடன் இணைந்த ஸ்ரேயாஸ் அய்யர் 28 ரன்களும், கே.எல்.ராகுல் 39 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பந்துகளை பவுண்டரிகளாக பறக்கவிட்ட விராட் கோலி, சர்வதேச போட்டிகளில் 73வது சதம் அடித்து அசத்தினார். 80 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அவர் இந்த இலக்கை எட்டினார். அவர் 113 ரன்கள் எடுத்த நிலையில், விக்கெட்டை இழந்தார். முன்னதாக அக்சர் பட்டேல் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

50 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது. முகமது ஷமி (4), சிராஜ் (7) ஆகியோர் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் கசுன் ரஜிதா 3 விக்கெட் கைப்பற்றினார். தில்சன் மதுசங்கா, கருணாரத்னே, தசுன் சனகா, தனஞ்செய டி சில்வா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்குகிறது.
 

தலைப்புச்செய்திகள்