Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வருமானவரி செலுத்துவோருக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றன

ஜனவரி 06, 2023 07:51

திருநெல்வேலியில், 4 மாவட்டங்களின் வருமானவரி செலுத்துவோருக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது! தமிழ்நாடு, புதுச்சேரி வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையாளர் பங்கேற்பு! திருநெல்வேலி,ஜன.6: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் வருமானவரித்துறை முதன்மை ஆணையாளர் ஆர்.ரவிச்சந்திரன், அலுவல் ரீதியான   2 நாட்கள் பயணமாக திருநெல்வேலிக்கு வந்திருந்தார்.

திருநெல்வேலி- திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பாளையங்கோட்டை ரஹ்மத் நகரில் அமைந்துள்ள, வருமானவரித்துறை அலுவலகத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், அங்குள்ள தனியார் உணவு விடுதி ஒன்றில் நடைபெற்ற, நெல்லை,தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி- ஆகிய 4 மாவட்டங்களின், தொழில் அதிபர்கள், வருமானவரி செலுத்துவோர், பட்டயக்கணக்காளர்கள் ஆகியோருடன், கலந்தாய்வு கூட்டம் (INTERACTIVE MEETING) நிகழ்ச்சியில், பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு,  மதுரை வருமானவரித்துறை தலைமை ஆணையாளர் சீமா ராஜ், முதன்மை ஆணையாளர் யூ.ஆஞ்சநேயலு, சென்னை வருமானவரித்துறை ஆணையாளர் பழனிவேல் ராஜன் ஆகியோர் முன்னிலை,  வகித்தனர். கலந்தாய்வு கூட்டம் முடிந்தவுடன், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையாளர் ஆர்.ரவிச்சந்திரன், நிருபர்களிடம் கூறியதாவது:- "தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 2022-23 நிதியாண்டில், மொத்தம் 1 லட்சத்து, 08 ஆயிரம் கோடி ரூபாய் நிதியினை, வருமானவரியாக பெறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதில், 2022 டிசம்பர்  வரையிலும், 70 சதவிகிதம் அளவுக்கு வசூலிக்கப்பட்டு விட்டது. இது கடந்த நிதியாண்டு (2021-22) பெற்றதை விட 28 சதவிகிதம் அதிகம் ஆகும். தமிழகத்துக்கு 17 சதவிகிதம் உட்பட அகில இந்திய அளவில் 14 லட்சம் கோடி ரூபாய் வருமானவரி பெறுவதற்கு  இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மதுரை கோட்டத்துக்கு  உட்பட்ட திருநெல்வேலி கோட்டத்தில் மட்டும் 77 சதவிகிதம் அளவுக்கு வருமானவரி கிடைத்துள்ளது. இது மதுரை கோட்டத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனை ஆகும். தாமாக வந்து வருமானவரியை செலுத்துவதில், மகாராஷ்டிரா, டெல்லி கர்நாடகம் இவற்றிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு 4-ஆவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், வருமானவரி  செலுத்துவோரின்  எண்ணிக்கை  10  சதவிகிதம் அதிகரித்து வருகிறது.

பணம் மதிப்பு  இழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.ஆகியவை வந்ததற்கு  பின்னர்,  வருமானவரி செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது"- இவ்வாறு தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின்  வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையாளர் ஆர்.ரவிச்சந்திரன் நிருபர்களிடம், கூறினார்.

அப்போது திருநெல்வேலி வருமானவரித்துறை கூடுதல் ஆணையாளர் ஆர்.வி.அருண்பிரசாத்,  வருமானவரி அலுவலர்கள் மீனாட்சி சுந்தரம், ராஜபாண்டி ஆகியோர், உடனிருந்தனர். உதவி ஆணையாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்