Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரிஷப் பண்ட் குணமடைய ஒரு ஆண்டு ஆகலாம்- டாக்டர்கள் தகவல்

ஜனவரி 02, 2023 01:30

டேராடூன்:  இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரரான ரிஷப் பண்ட், தனது சொகுசு காரில் டெல்லியில் இருந்து உத்தரகாண்டின் ரூர்க்கிக்கு சென்ற போது விபத்தில் சிக்கினார். கார் சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக ரிஷப் பண்ட் காயத்துடன் உயிர் தப்பினார். அவர் டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தலை, முதுகு, கால் ஆகியவற்றில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். 

அவரது கணுக் காலில் ஜவ்வு கிழிந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ரிஷப் பண்ட்டின் காயங்கள் குணமடைய 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம் என்று டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் ரிஷப் பண்டின் காயங்கள் முழுமையாக குணமடைந்து அவர் மீண்டும் இந்திய அணியில் இணைந்து விளையாட ஒரு ஆண்டு ஆகலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக டாக்டர்கள் கூறும்போது, ரிஷப் பண்டின் உடல் நிலை சீராக உள்ளது. அவரது காயங்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அவர் இந்திய அணியில் விளையாடுவதற்காக முழு உடல் தகுதியை பெற ஒரு ஆண்டு வரை ஆகலாம் என்றனர். மேலும் ரிஷப் பண்ட்க்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவ குழுவினர் கூறும் போது, ரிஷப் பண்ட் உடல் ரீதியாக ஓய்வெடுக்க போதுமான நேரம் கிடைப்பது முக்கியம். 

காயங்களால் அவர் இன்னும் வலியுடன் இருக்கிறார். அவரை பார்க்க வருபவர்களிடம் பேசுகிறார். இது விரைவாக குணமடைய வேண்டிய அவரது ஆற்றலை குறைக்கிறது. அவரை பார்க்க விரும்புபவர்கள் அதை தற்போது தவிர்க்க வேண்டும். ரிஷப் பண்ட் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்றனர்.

தலைப்புச்செய்திகள்