Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பிற்கு நிதியுதவி : கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ சோதனை

டிசம்பர் 29, 2022 03:40

திருவனந்தபுரம்: கேரளாவில் இரண்டாவது நாளாக இன்றும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று திருவனந்தபுரம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, கொல்லம், ஆலப்புழா, மலப்புரம் மாவட்டங்களில் 56 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு நிதியுதவி செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 

பிஎஃப்ஐ அமைப்பின் உறுப்பினர்கள், களப்பணியாளர்களின் இல்லங்களில் சோதனை நடைபெறுகிறது. கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 22 மாநிலங்களில் கிளைகளைப் பரப்பி செயல்பட்டு வந்த பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து அண்மையில் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (உபா - UAPA) என்ற சட்டத்தின் பிரிவு 3-ஐ பயன்படுத்தி பிஎஃப்ஐ தடை செய்யப்பட்டுள்ளது.

‘பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது இணைந்த அமைப்புகள் அல்லது முன்னணிகள் நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை சீர்குலைக்கும் விதத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபடுதல், அதற்கு நிதியளித்தல், கொடூரமாக கொலைகள் செய்தல் உள்பட நாட்டின் அரசியல் சட்ட அமைப்பை மதிக்காமல் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் தொடர் குற்றங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது’ அதனால் தடை செய்யப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இருப்பினும் அவ்வப்போது அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் என்ஐஏ சோதனைக்கு ஆளாவது வழக்கமாகி உள்ளது. இந்நிலையில் கேரளாவில் தான் பிஎஃப்ஐ அமைப்பு முழுவீச்சில் செயல்பட்டது என்று கூறும் என்ஐஏ, தடைக்குப் பின்னரும் கூட ரகசியமாக பிஎஃப்ஐ இயங்குவாதகவும் நிதி திரட்டுவதாகவும் வந்த தகவலையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தலைப்புச்செய்திகள்