Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை

டிசம்பர் 26, 2022 11:50

நெல்லை: வடகிழக்கு பருவமழை முடிவடையும் தருவாயில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இந்த தாழ்வு மண்டலமானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து குமரிக்கடல் நோக்கி நகர தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருந்தது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோர பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்பட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இரவில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. ஒருசில இடங்களில் கனமழை பெய்தது. இன்று காலை வரையிலும் மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது. நெல்லை புறநகர் பகுதிகளை பொறுத்தவரை சேரன்மகாதேவி, களக்காடு, மூலக்கரைப்பட்டி, அம்பை, ராதாபுரம், நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சாரல் மழை பெய்தது. ஒரு சில இடங்களில் பலத்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி கிடந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ராதாபுரத்தில் 18.4 மில்லிமீட்டரும், அம்பையில் 6 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. மாநகர பகுதியில் பெய்த சாரல் மழையின் காரணமாக நயினார்குளம் சாலை, தொண்டர் சன்னதி சாலை மேடு பள்ளமாக காட்சியளித்தது. பாளை, நெல்லையில் தலா 1 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ள அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகியவற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக பிரதான அணையான பாபநாசத்தில் 28 மில்லிமீட்டர் மழை பெய்தது. மணிமுத்தாறில் 10.4 மில்லிமீட்டரும், கன்னடியன் பகுதியில் 8.2 மில்லிமீட்டரும் மழை பெய்தது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று குறைவாகவே பெய்திருக்கும் நிலையில், பாபநாசம் அணையில் சுமார் 90 அடி நீர் இருப்பதால் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலையில் பனிப்பொழிவு நீடித்தது. மாலையில் லேசான சாரல் மழை பெய்த நிலையில் இரவில் பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதை கப்பல்களுக்கு அறிவிப்பு செய்யும் வகையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருப்பதற்காக மீன்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாநகர பகுதியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்தது. கயத்தாறு, கடம்பூர் மற்றும் கழுகுமலையில் மாலையில் லேசான சாரல் மழை பெய்தது. சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 15.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், குலசேகரப்பட்டினம் மற்றும் விளாத்திகுளத்திலும் விட்டுவிட்டு சாரல் பெய்தது. பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டமாக இருந்தது. தென்காசி மாவட்டத்தில் ராமநதி மற்றும் கருப்பாநதி அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக ராமநதியில் 16 மில்லிமீட்டர் மழை பெய்தது. ஆய்குடியில் 7.5 மில்லிமீட்டரும், தென்காசியில் 5 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் இன்று காலை வரையிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. குண்டாறு அணை பகுதியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது. சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் பெய்த மழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி கிடந்தது.

தலைப்புச்செய்திகள்