Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலம் இன்று நடக்கிறது

டிசம்பர் 23, 2022 01:07

கொச்சி:  ஐ.பி.எல். ஏலம் 16-வது ஐ.பி.எல். அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கழற்றிவிடப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று  நடக்கிறது. 
ஏலப்பட்டியலில் 273 இந்தியர், 132 வெளிநாட்டவர் என்று மொத்தம் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் இருந்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 87 வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), 20 ஓவர் உலக கோப்பை தொடரில் தொடர்நாயகன் விருது பெற்ற சாம் கர்ரன் (இங்கிலாந்து), கேமரூன் கிரீன் (ஆஸ்திரேலியா), சிகந்தர் ராசா (ஜிம்பாப்வே) மற்றும் இந்தியாவின் மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே, வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட், அண்மையில் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் அதிரடியாக 3 சதங்கள் நொறுக்கிய இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா போன்ற வீரர்களுக்கு கடும் கிராக்கியுடன் அதிக விலை போக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். 
காயத்தால் கடந்த சீசனில் விளையாடாத சாம் கர்ரனை மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் குறி வைத்துள்ளதாக தெரிகிறது. Also Read - ஐபிஎல் மினி ஏலம்: வீரர்களை வாங்கும் போது அணி நிர்வாகங்கள் அறிந்திருக்க வேண்டிய 5 விதிகள்...! தென்ஆப்பிரிக்காவின் கிறிஸ் மோரிஸ் 2021-ம் ஆண்டில் ரூ.16¼ கோடிக்கு விலை போய் ஆச்சரியப்படுத்தினார். அந்த தொகையை யாராவது மிஞ்சி சாதனை படைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழக வீரர் ஜெகதீசன் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜாசன் ராய், தென்ஆப்பிரிக்காவின் ரோசவ், வெஸ்ட் இண்டீசின் நிகோலஸ் பூரன், பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன் உள்ளிட்ட 19 வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடியில் இருந்து இவர்களது ஏலத்தொகை ஆரம்பிக்கும். 
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோ ரூட்டும் ஏலப்பட்டியலில் உள்ளார். இவரது தொடக்க விலை ரூ.1 கோடியாகும். என்.ஜெகதீசன், முருகன் அஸ்வின் உள்பட16 தமிழக வீரர்களும் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். இதில் லிஸ்ட் ஏ வகை கிரிக்கெட்டில் 277 ரன்கள் குவித்தும், தொடர்ச்சியாக 5 சதங்கள் விளாசியும் உலக சாதனை படைத்த என். ஜெகதீசனை இழுக்க கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்சில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜெகதீசனின் அடிப்படை விலை ரூ.20 லட்சமாகும். 
இதே போல் பஞ்சாப்பை சேர்ந்த ஆல்-ரவுண்டர் சன்விர் சிங்கை எடுக்கவும் அணிகள் ஆர்வம் காட்டலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த ஐ.பி.எல்.-ல் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரரை அதாவது மாற்று வீரரை பயன்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளதால அதற்கு ஏற்ப 10 அணிகளும் பல்வேறு திட்டமிடலுடன் ஆயத்தமாகியுள்ளன. சென்னை சூப்பர் கிங்சுக்கு 2 வெளிநாட்டவர் உள்பட 7 வீரர்கள் தேவைப்படுகிறார்கள். ரூ.20.45 கோடி கையிருப்பு உள்ளது. ஏலத்தில் செலவிடுவதற்காக அதிகபட்சமாக ஐதராபாத் சன்ரைசர்ஸ் ரூ.42¼ கோடியை கையிருப்பாக கொண்டுள்ளது. ஏலம் நிகழ்ச்சி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.  இணையதளத்தில் ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.

தலைப்புச்செய்திகள்