Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

11வது மக்களவை தேர்தல்: 2 வருடங்களில் இந்தியாவை ஆண்ட 3 பிரதமர்கள்

மே 11, 2019 06:25


இந்தியா: இந்தியாவில் 11வது மக்களவை தேர்தல் கடந்த 1996ம் ஆண்டு நடந்தது.  இதில் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா ஆகிய இரு கட்சிகள் இடையே போட்டி இருந்தது.  தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்த தேர்தலில் பா.ஜ.க. 161 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 140 தொகுதிகளிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 52 தொகுதிகளிலும், ஜனதா தளம் 46 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.  பா.ஜ.க. பிற கட்சிகளை விட அதிக தொகுதிகளை கைப்பற்றியிருந்தது.

குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா அரசமைக்க பா.ஜ.க. தலைவராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாயை அழைத்தார்.  இதனால் 1996ம் ஆண்டு மே 15ந்தேதி பதவியேற்ற வாஜ்பாய்க்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 2 வாரங்கள் வழங்கப்பட்டன.  மே 31ந்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்தது.  போதிய ஆதரவை அவரால் பெற முடியாத நிலையில் மே 28ந்தேதி பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.  அவரது தலைமையில் 13 நாட்களே ஆட்சி நீடித்தது.

2வது மிக பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முன்வரவில்லை.  இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி உருவாகி இருந்தது.  ஜனதா தளம் தலைமையிலான இந்த கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வழங்கியது.  இதனால் நாடாளுமன்ற மக்களவையின் 545 உறுப்பினர்களில் 332 உறுப்பினர்களின் ஆதரவுடன் கர்நாடக முதல் மந்திரியான எச்.டி. தேவ கவுடா நாட்டின் 11வது பிரதமரானார்.

ஆனால் ஐக்கிய முன்னணியில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் வேற்றுமையால் தேவ கவுடா பதவி விலக நேரிட்டது.  ஆனால், மீண்டும் ஒரு தேர்தல் நடைபெற காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை.  இதனால் புதிய தலைவர் தலைமையில் மற்றொரு ஐக்கிய முன்னணி அரசுக்கு ஆதரவளிக்க முன்வந்தது.  ஐக்கிய முன்னணி ஐ.கே. குஜ்ராலை புதிய தலைவராக தேர்வு செய்தது.  கடந்த 1997ம் ஆண்டு ஏப்ரல் 21ந்தேதி அவர் பிரதமராக பதவியேற்று கொண்டார்.  காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவளித்தது.

இந்நிலையில், பீகார் மாநில முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் கால்நடை ஊழல் வழக்கில் சிக்கினார்.  அவரிடம் விசாரணை மேற்கொள்ள கவர்னர் கித்வாயிடம் சி.பி.ஐ. அனுமதி கோரியது.  அவர் ஒப்புதல் வழங்கிய நிலையில், ஐக்கிய முன்னணியின் உள்ளே இருந்தும், வெளியே இருந்தும் லாலு பதவி விலக கோரிக்கை வலுத்தது.  ஆனால் லாலு மறுத்து விட்டார்.

அவரது அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் பதவி விலகும்படி கூறிய குஜ்ரால், சி.பி.ஐ. இயக்குனர் ஜோகிந்தர் சிங்கிற்கு இடமாறுதல் வழங்கினார்.  இதனால் லாலுவை காக்க குஜ்ரால் முயற்சிக்கிறார் என பொதுமக்கள் நினைத்தனர்.  ஜனதா தளத்தில் தனக்கு அதிகாரமில்லை என்று அதில் இருந்து விலகி கடந்த 1997ம் ஆண்டு ஜூலை 3ந்தேதி ராஷ்டீரிய ஜனதா தளம் என்ற கட்சியை லாலு தொடங்கினார்.  ஜனதா தளத்தின் 45 உறுப்பினர்களில் 17 பேர் அவருக்கு ஆதரவு வழங்கினர்.

எனினும், அவரது கட்சி அந்த கூட்டணியில் தொடர்ந்தது.  இதனால் குஜ்ரால் அரசு உடனடி ஆபத்தில் இருந்து தப்பியது.  தொடர்ந்து 11 மாதங்கள் வரை அவர் பிரதமராக நீடித்தார்.

தலைப்புச்செய்திகள்