Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தீபாவளியை முன்னிட்டு ரூ.10 கோடிக்கு ஆட்டிறைச்சி விற்பனை செய்ய இலக்கு

அக்டோபர் 19, 2022 12:44

சென்னை,

தீபாவளி பண்டிகை இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளுக்கு மறுநாள் திங்கட்கிழமை வருகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவு சாப்பிடாமல் விரதம் இருந்தவர்கள் ஐப்பசி மாதத்தில் அசைவ உணவை உட்கொள்வார்கள். பொதுவாக ஞாயிற்றுக்கிழமை அசைவ உணவை மக்கள் அதிகம் எடுத்துக்கொள்வார்கள். தீபாவளி அன்று மாலை 4 மணிக்கு மேல் அமாவாசை வருகிறது. அதனால் பெரும்பாலானவர்கள் ஞாயிற்றுக்கிழமை அசைவ உணவை எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. பண்டிகை தினத்தில் குறைந்த அளவில் தான் ஆடு, மாடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகள் விற்பனையாகும் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் இந்த தீபாவளி ஞாயிறோடு இணைந்து வருவதால் ஆடு, கோழி இறைச்சி விற்பனை அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் ஆடுகள் வெட்டி இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. இதில் புளியந்தோப்பு ஆட்டிறைச்சி கூடத்தில் மட்டும் 6 ஆயிரம் ஆடுகள் வெட்டப்படுவது வழக்கம். சைதாப்பேட்டையில் 1000 ஆடுகளும், வில்லிவாக்கம், கள்ளிகுப்பம் ஆகிய 2 கூடங்களிலும் சேர்த்து 1000 ஆடுகள் வெட்டப்படுகின்றன. தீபாவளி பண்டிகை தினமான ஞாயிறு, திங்கள் ஆகிய 2 நாட்களிலும் 20 ஆயிரம் ஆடுகள் வரை வெட்டுவதற்கு வியாபாரிகள் தயாராகி வருகின்றனர்.

இதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை வாங்கி வெட்டுவதற்கு தயார் நிலையில் வைத்துள்ளனர். ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து குறைந்த அளவில் ஆடுகள் வந்துள்ளன. 

இதுகுறித்து சென்னை ஆட்டிறைச்சி மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் சபீர் அகமது, செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கூறியதாவது:- இந்த ஆண்டு தீபாவளி தினத்தை விட ஞாயிற்றுக்கிழமை தான் வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். திங்கட்கிழமை அமாவாசை வருவதால் 60 சதவீதம் ஆட்டிறைச்சி விற்பனை ஞாயிற்றுக்கிழமையும் 40 சதவீதம் திங்கட்கிழமையும் நடக்க வாய்ப்பு உள்ளது.

சென்னையில் சுமார் ரூ.10 கோடி அளவிற்கு மொத்தம் மற்றும் சில்லறை ஆட்டிறைச்சி விற்பனை 2 நாட்களும் சேர்த்து நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கான ஆடுகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ளன. 20 ஆயிரம் ஆடுகளை இந்த பண்டிகைக்கு வெட்ட திட்டமிட்டுள்ளோம். கடந்த காலங்களை போல ஆட்டிறைச்சி விற்பனை தற்போது நடை பெறுவது இல்லை. பண்டிகை காலங்களில் வீடுகளில் சமையல் செய்வது குறைந்து விட்டது. ஓட்டல்களில் பிரியாணி ஆர்டர் கொடுத்து விடுகின்றனர். ஆன்லைன் வழியாக புக்கிங் செய்து விடுவதால் வீட்டிற்கே பிரியாணி உள்ளிட்ட உணவு பொருட்கள் கிடைத்து விடுகின்றன. இதனால் ஆட்டிறைச்சி விற்பனை குறைந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

தலைப்புச்செய்திகள்