Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எது எப்படியோ எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த திருவண்ணாமலை மாவட்டம் இப்டிதாங்க..!

மே 10, 2019 01:22

திருவண்ணாமலை: திருவண்ணாமலை என்றதும் அனைவருக்கும் நினைவில் வருவது அருணாசலேஸ்வரரும், கார்த்திகை தீபம், பவுர்ணமி கிரிவலமும்தான். பஞ்சபூதங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கி வருகிறது. 

கார்த்திகை தீப கிரிவலம்:
இங்கு நடைபெறும் கார்த்திகை மகாதீப விழா இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும். கார்த்திகை மகா தீபத்தின்போது 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், பவுர்ணமி நாட்களில் பல லட்சம் பக்தர்களும் திருவண்ணாமலையில் உள்ள மலையை சுற்றி கிரிவலம் வருவார்கள். 
திருவண்ணாமலை நகரம் மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. இந்நகரம்  மாதத்தில் 2 நாட்கள் திருவிழாகோலமாக காட்சியளிக்கும். அதேபோன்று இங்குள்ள   ரமணாஸ்ரமம், சாத்தனூர் அணை, ஜவ்வாதுமலை ஆகியவையும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

டான்காப் ஆலையை திறக்க கோரிக்கை:
திருவண்ணாமலையில் இயங்கிவந்த டான்காப் கடலை எண்ணெய் ஆலை கடந்த 2002-ம் ஆண்டு மூடப்பட்டது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுளள்ளனர். இந்த டான்காப் ஆலையை திறக்கவேண்டும் என்று விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இதுவரை ஆலையை திறக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரையில் விவசாயமே பிரதான தொழிலாக இருக்கிறது. அதிலும் வானம்பார்த்த பூமியே அதிகம் இருப்பதால் வேர்க்கடலை அதிகமாக பயிரிடப்படுகிறது. எனவே விவசாயிகளின் நலன்கருதி டான்காப் ஆலையை திறக்கவேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. 

நகருக்கு வெளியே பஸ்நிலையம்:
அதேபோன்று திருவண்ணாமலை பஸ்நிலையம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் ஒவ்வொரு பவுர்ணமியின்போதும், கார்த்திகை தீபத்தின்போதும் நகருக்கு வெளியே தற்காலிக பஸ்நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் ஒவ்வொரு பஸ்நிலையத்துக்கும் செல்வதில் சிரமப்பட்டு வருகிறார்கள். 
எனவே நகருக்கு வெளியே பஸ்நிலையம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாக இருந்துவருகிறது. இதற்காக பஸ்நிலையம் அமைக்க இடம்தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. ஆனால் நிதி ஒதுக்கியும் இதுவரை இடம் தேர்வு செய்யப்படவில்லை. 

பக்தர்களுக்கு மூச்சுத்திணறல்:
திருவண்ணாமலை நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் ஈசானிய பகுதியில் குவித்துவைக்கப்படுகிறது. இதில் மர்ம நபர்கள் அடிக்கடி தீவைத்துவிடுகிறார்கள். இந்த இடம் கிரிவலப்பாதையில் இருப்பதால் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும்நிலை உள்ளது. 

பட்டா, மின் இணைப்பு வழங்க கோரிக்கை:
திருவண்ணாமலையில் மலையடிவாரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகட்டி பலஆண்டுகளாக வசித்துவருகிறாக்கள். இந்த குடியிருப்புகளுக்கு பட்டா, மின் இணைப்பு வழங்கப்படவில்லை. குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கவேண்டும், மின்இணைப்பு வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரை அதுகுறித்த எந்த நடவடிக்கையும் இல்லை.

கிடப்பில் போடப்பட்ட நெடுச்சாலை பணி திட்டம்:
இது மட்டுமில்லாமல் பல ஆண்டுகளாக திண்டிவனம் - கிருஷ்ணகிரி செல்லும் மாநில நெடுச்சாலை பணி கிடப்பில் கிடக்கிறது. இதனால் திருவண்ணாமலையில் இருந்து சென்னை, பெங்களுர், சேலம், திருப்பூர், கோவை போன்ற தொழில்நகரங்களுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதி படுகிறார்கள். ஒரு மணி நேரத்தில் செல்ல வேண்டிய செஞ்சிக்கு ஒன்றறை மணி நேரத்திற்க்கும் மேல் ஆகிறது.
இது மட்டுமில்லாமல் செங்கம் போன்ற முக்கிய நகரங்களிருந்து ஜமுனாமருவத்தூர், ஜவ்வாதுமலை, பருவதமலை(சிவன் கோவில்) , கலசப்பாக்கம், புதுப்பாளையம், ஆரணி,   போன்ற இடங்களுக்கு பேருந்து வசதியும் இல்லை.

அடிப்படை வசதி இல்லை: 
திருவண்ணாமலை நகர்புறத்தில் இயங்கும் அரசு மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவமனை, மத்திய பேருந்து நிலையம், கிரிவலபாதை ஆகியவற்றில் அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, வாகன வசதி என எதுவுமே இல்லாமல் கேட்பாரற்று இருந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். பேருந்து வசதி:
திருவண்ணாமலை தாலுக்காவிலிருந்து சில கிராமங்களை பிரித்து (தண்டரை, சு.நல்லூர், ஆனந்தல், மதுராம்பட்டு, அண்டப்பள்ளம், வெறையூர், வாளவெட்டி, வளசை, ஆண்டியாபாளையம்) அதை கீழ்பென்னாத்தூர் தாலுக்காவில் இணைத்தனர். இதனால்  அந்த கிராமங்களிருந்து தாலுக்கா அலுவலகத்திற்கு  செல்ல பேருந்து வசதியே இல்லாமல் மக்கள் 25கி.மீ. சுற்றி அதாவது தங்கள் கிராமத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்று அங்கிருந்து கிழ்பென்னாத்தூர் தாலுக்கா அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. 
ஒரு முறை தாலுக்கா அலுவலகத்திற்கு சென்று வருவதற்கு 150 ரூபாய்கும் மேல் செலவாகிறது எனவும், அதுமட்டுமல்லாமல் ஒருநாள் முழுவதும் வீணாகுவதாகவும், அந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் வேதனையடைகிறார்கள். 

சிறப்பான ஆட்சியாளர் கந்தசாமி:

இந்த மாவட்டத்தினர் தற்போது அதிகமாக பெருமைப்படுத்தும் அளவில் செயல்பட்டு வருகிறார் இம்மாவட்ட ஆட்சியாளரான கந்தசாமி ஐ.ஏ.எஸ். இவர் பொருப்பேற்றபின் பல துறையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. மாவட்டத்தில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனே அந்த இடத்திற்கு சென்று அதை உரிய முறையில் களத்தில் ஆய்வு செய்து அதை தீர்த்து வைக்க முற்படுவார். பொதும்மக்கள் யாராக இருந்தாலும் இவரை எளிதாக நேரில் சென்று பார்க்கமுடிகிறது. 

சிறப்பான ஆன்மிக சுற்றுலாத்தளம்: 
அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபம், ரமணாஸ்வரம், சாத்தனூர் அனை , சவ்வாதுமலை, திருவண்ணாமலை மாவட்டத்தின் இன்னொரு சிவாலயமான பருவதமலை, பவுர்ணமி பவுர்ணமி ஜொலிக்கும் திருவண்ணாமலை நகரம், இது போன்ற சுற்றுல தளங்கலையும், ஆரணி பட்டு, களம்பூர் அரிசி , போன்ற தொழில் நகரங்களையும் கொண்டு முன்னேறாத மாவட்டமாக இம்மாவட்டம் திகழ்கிறது. 

எது எப்படியோ எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த திருவண்ணாமலை மாவட்டம் இப்டிதாங்க இருக்கு... நிறைகள் குறைவாகுதும் இல்லை... குறைகள் நிறைவாகுவதும் இல்லை என்று கூறுகிறார்கள் பொதுமக்கள். 

- சந்தோஷ்குமார்,
செய்தியாளர், சிகரம் நியூஸ்
------ 

தலைப்புச்செய்திகள்