Wednesday, 5th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அக்., 9-ல் தி.மு.க., பொதுக்குழு : மீண்டும் தலைவராகும் மு.க.ஸ்டாலின்

செப்டம்பர் 29, 2022 07:49

சென்னை : தி.மு.க. பொதுக்குழு அடுத்த மாதம் 9ம் தேதி சென்னையில் கூடுகிறது. அதில், முதல்வர் ஸ்டாலின் மீண்டும் தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
தி.மு.க. உட்கட்சி தேர்தல் இறுதி வடிவம் பெற்றுள்ளது. கிளை, பேரூர், ஒன்றிய, நகர, மாநகர், மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் முடிவடைந்து, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஓரிரு நாளில், மாவட்டச் செயலர்கள் தேர்வு பட்டியல் வெளியாக உள்ளது. மாவட்ட செயலர் பதவிக்கு கட்சியில் கடும் போட்டி இருந்தபோதிலும், பெரிய அளவில் மாற்றம் செய்ய கட்சி தலைமை விரும்பவில்லை. ஓரிருவரை தவிர, மற்ற அனைவரும் பதவியில் நீடிக்கும் வகையில், பட்டியல் தயாராகி வருகிறது.


இதற்கிடையில், கட்சியின் தலைமை அமைப்பான பொதுக்குழுவை கூட்டுவதற்கான அறிவிப்பை, விதிப்படி, 10 நாட்களுக்கு முன்னதாக வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில் பொதுக்குழு அறிவிப்பை, அக்கட்சி பொதுச் செயலர் துரைமுருகன் நேற்று வெளியிட்டார்.

அதில் கூறியிருப்பதாவது: தி.மு.க. தலைவர், பொதுச்செயலர், பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுக்க 15வது கட்சி தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம், அக். 9ம் தேதி காலை 9:00 மணிக்கு சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்கஸ் கன்வென்ஷன் சென்டரில் நடக்க உள்ளது.

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
தி.மு.க. துணைப் பொதுச்செயலர் பதவியை, முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்துள்ளார். அந்த பதவி தற்போது காலியாக உள்ளது.

பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய துணைப் பொதுச் செயலராக, கனிமொழி தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.பொதுக்குழுக் கூட்டத்தில், லோக்சபா தேர்தல் தொடர்பாகவும், தி.மு.க., கூட்டணியில் கூடுதலாக எந்தெந்த கட்சிகளை சேர்க்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

தலைப்புச்செய்திகள்