Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நாளை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை புறப்பட்டார்

செப்டம்பர் 14, 2022 04:36

சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களுக்கு செல்கிறார். இதற்காக, இன்று (புதன்கிழமை) காலை 11.35 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார். மதுரையை சென்றடைந்த பிறகு, சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அவர், பின்னர் அங்கிருந்து திண்டுக்கல்லுக்கு காரில் செல்கிறார். அங்கு ஓட்டல் அமிகாவில் தங்குகிறார். அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, திண்டுக்கல் தோட்டனூத்து என்ற இடத்தில் இலங்கை தமிழர்களுக்காக கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார். அங்கிருந்து, மாலை 5.45 மணிக்கு மதுரைக்கு புறப்படுகிறார்.

மதுரையில் அரசு விருந்தினர் இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்குகிறார். நாளை (வியாழக்கிழமை) காலை 7.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, அங்குள்ள அண்ணா சிலைக்கு அவர் மாலை அணிவிக்கிறார். காலை 7.25 மணிக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, 7.30 மணிக்கு நெல்பேட்டையில் உள்ள மைய சமையல் கூடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார். அங்கு காலை உணவு எடுத்துச்செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். பின்னர், காலை 8 மணிக்கு ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அங்கு மாணவர்களுக்கு அவர் காலை உணவை பரிமாறுகிறார். பின்னர், மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிடுகிறார். அங்கிருந்து காரில் விருதுநகர் வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். அன்று மாலை விருதுநகரில் நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவில் கலந்துகொள்கிறார். 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.15 மணிக்கு மதுரை மாரியட் ஓட்டலில் நடைபெறும் குறு, சிறு மற்றும் நடுத்தர துறையின் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். பின்னர், மதியம் அங்கிருந்து புறப்பட்டு விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார்.

தலைப்புச்செய்திகள்