Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலம்மாள் பாட்டிக்கு வீடு ஒதுக்கீடு

ஆகஸ்டு 23, 2022 01:21

நாகர்கோவில்: பொக்கை சிரிப்பில் முதல்வரை கவர்ந்த வேலம்மாள் பாட்டிக்கு வீடு ஒதுக்கப்பட்டது. இதற்கான உத்தரவு நகலை அதிகாரிகள் நேரில் சென்று அவரிடம் வழங்கினர்.

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற சில நாட்களில் அரசின் விளம்பரங்களில் பொக்கை வாய் சிரிப்புடன் போஸ் கொடுத்தவர் 80 வயது வேலம்மாள் பாட்டி. கொரோனா நிவாரண நிதியாக அரசு வழங்கிய நான்கு ஐநுாறு ரூபாய் நோட்டுகளுடன் சிரித்த படி இவர் கொடுத்த போஸ், முதல்வரை கவர்ந்தது.

இது போன்ற ஏழை தாய்மார்களின் சிரிப்புதான் தமது அரசின் சிறப்பு என்று முதல்வர் டுவிட் செய்தார். இதை தொடர்ந்து வேலம்மாள் பாட்டிக்கு முதியோருக்கான ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்கப்பட்டது. நாகர்கோவிலில் வெள்ள நிவாரண பணிகளை பார்வையிட வந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வீடு இல்லாததால் திண்ணைகளில் துாங்குவதாக கூறினார். அதற்கு வீடு தருவதாக முதல்வர் உறுதியளித்தாராம்.

வேலம்மாள் கூறியது: முதல்வரை சந்தித்த போது சாப்பிட்டீங்களா , ஆயிரம் ரூபாய் கிடைத்ததா என்று கேட்டார். நானும் கிடைத்தது என்று சொன்னேன். ஐயா எனக்கு வீடு இல்லை, ஒரு வீடு வேணும்னு கேட்டேன். அவரும் தருகிறேன் என்று சொன்னார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, என்றார்.இவரது வீட்டின் அருகே புளியடியில் அரசு கட்டிய தொகுப்பு வீடுகள் உள்ளது. அரசு இதில் ஒரு வீட்டை அவருக்கு வழங்கலாம். ஆனால் நடவடிக்கை இல்லை. இது குறித்து செய்தி வெளியாகியது.

இந்நிலையில், வேலம்மாள் பாட்டியின் கோரிக்கை குறித்து குறித்த செய்தி அறிந்த முதல்வர் ஸ்டாலின் உடனடியாக மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு வீடு ஒதுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, நேற்று இரவு அதிகாரிகள், வேலம்மாள் பாட்டியை நேரில் சந்தித்து வீடு ஒதுக்கப்பட்டதற்கான உத்தரவு நகலை அவரிடம் அதிகாரிகள் வழங்கி உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்