Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தெற்காசியாவிலே தமிழகம் சிறந்து விளங்க வேண்டும்: முதல்வர்  ஆசை

ஆகஸ்டு 02, 2022 07:16

சென்னை : தெற்காசியாவிலேயே தொழில் முதலீடுகள் செய்ய உகந்த பகுதியாக தமிழகம் விளங்க வேண்டும் என்பதே என் ஆசை என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னையில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கம் இயக்கம் சார்பில் நடந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். தொழில் காப்பகங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களை பார்வையிட்டார். 

புத்தொழில் துவங்கும் தகுதியான 31 நபர்களுக்கு தலா ரூ 5 லட்சம் நிதியை முதல்வர் வழங்கினார்.
பின் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது :

தமிழகத்தில் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு இத்திட்டம் பற்றி கொண்டு போய் சேர்க்க வேண்டும். தமிழக அனைத்துத் துறைகளும் முன்னேற்றம் பெறுகின்றன. நம்முடைய இலக்கை நோக்கி சிறு முன்னேற்றம் கண்டு வருகிறோம். தொழில்புரிய ஏதுவான மாநிலங்களின் பட்டியலில் 3 வது இடத்திற்கு தமிழகம் முன்னேறியுள்ளது. 1,240 புத்தொழில் நிறுவனங்கள் இந்த கருத்தரங்கில் இடம் பெற்றுள்ளன. இங்கு 302 நிறுவனங்கள் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

தொழிற்கல்வி மாணவருக்கு புத்தொழில் வாய்ப்பு தேவை. 31 நிறுவனங்களுக்கு புத்தொழில் ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 18 நிறுவனங்கள் பெண்களால் நடத்தப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் புத்தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட வேண்டும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் புத்தொழில் காப்பகங்கள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் புத்தொழில் முயற்சி நிறுவனம் 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைய உள்ளது. இளம் தொழில் முனைவோரின் பொருட்களை சந்தைப்படுத்த 'ஸ்டார்ட் அப் ' தமிழ்நாடு சார்பில் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் தொழில் அதிபர்களை ஒருங்கிணைத்து முதலீடுகளுக்கான தமிழ் ஏஞ்சல்ஸ் என்ற நிறுவனம் அமைக்கப்படும்.

தெற்காசியாவிலேயே தொழில் முதலீடுகள் செய்ய உகந்த பகுதியாக தமிழகம் விளங்க வேண்டும் என்பதே என் ஆசை. தமிழகத்தின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக பரந்தூர் புதிய விமான நிலையம் அமையும். தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் குறிக்கோளில் மற்றொரு மைல்கல்லாக, 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் உடையதாக பரந்தூர் விமான நிலையம் அமையும். 2 ஓடுதளங்கள், விமான நிலைய முனையங்கள், சரக்கு கையாளும் முனையத்துடன் விமான நிலையம் அமைகிறது.

தற்போதைய உத்தேச திட்டமதிப்பு ரூ.20 ஆயிரம் கோடி. விரிவான திட்ட அறிக்கைக்கு பின் மதிப்பு இறுதியாகும். எதிர்காலத்தில் உலக நாடுகளுடன் ஒப்பிட்டு வளர்ச்சியை காட்டும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. விரிவான திட்ட அறிக்கை தயாரித்தபின் புதிய விமான நிலையத்திற்கு திட்ட மதிப்பு இறுதி செய்யப்படும். இட அனுமதி பெற்றபின் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

தலைப்புச்செய்திகள்