Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கவுதம் கம்பீர் மீது ஆம் ஆத்மி பாய்ச்சல்

மே 09, 2019 11:33

டெல்லி: டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் மே 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக அங்கு பிரசாரம் செய்கிறார்கள். அண்மையில் பா.ஜனதாவில் இணைந்த கவுதம் கம்பீர், கிழக்கு டெல்லியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளரான அதிஷி போட்டியிடுகிறார். 

கவுதம் கம்பீர் 2 வாக்காளர் அட்டையை வைத்துள்ளதாக ஆம் ஆத்மியை சேர்ந்த அதிஷி குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் அதிஷியை விமர்சனம் செய்யும் வகையில் மோசமான வாசகங்கள் அடங்கிய துண்டுச்சீட்டு டெல்லியில் வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் அதிஷி பேசுகையில், இப்படி மோசமான வார்த்தைகள் பிரயோகப்படுத்தப்படுகிறது என கண்ணீர் விட்டு அழுதார். தனிப்பட்ட முறையிலான தாக்குதலுக்காக பா.ஜனதாவால் இந்த துண்டுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள தொடர்ச்சியான டுவிட் செய்தியில், “உங்களுக்கு தைரியம் இருந்தால் பா.ஜனதா வேட்பாளர் கவுதம் கம்பீர் வெளியிட்ட துண்டுச்சீட்டை வாசித்து பாருங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

துண்டுச்சீட்டுக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. “அவர்கள் எவ்வளவு கீழ்த்தரமாக இறங்குவார்கள் என்பதை காட்டியுள்ளார்கள்” என அதிஷி கூறியுள்ளார். துண்டுச்சீட்டில் இடம் பெற்றுள்ள வாசகம் மிகவும் மோசமாக உள்ளது, இதனை படிக்கும் யாராக இருந்தாலும் அவமானம் கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார். 

“கவுதம் கம்பீர் இவ்வளவு மோசமான நிலைக்கு செல்வார் என்று நினைக்கவில்லை. இதுபோன்ற எண்ணம் கொண்டவர்கள் போட்டியிடும் போது பெண்கள் எப்படி பாதுகாப்பை எதிர்பார்க்க முடியும்? அதிஷி மிகவும் வலிமையாக இருங்கள். இது உங்களுக்கு எப்படி கடினமாக இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும். இதுபோன்ற சக்திகளை எதிர்த்து நாம் போராட வேண்டும்” என கெஜ்ரிவால் கூறியுள்ளார். 
 

தலைப்புச்செய்திகள்