Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆன்லைன் ரம்மி: பல உயிர்களை இழந்த பின்னர் தான் தடை சட்டத்தை தமிழக அரசு கொண்டு வருமா? - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

ஜுலை 16, 2022 08:36

'ஆன்லைன்' ரம்மி விளையாட்டில் மேலும் ஒருவர் பலியான நிலையில், இன்னும் பல உயிர்களை இழந்த பின்னர் தான் தடை சட்டத்தை தமிழக அரசு கொண்டு வருமா? என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 சென்னை, அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியாளர்களின் பண பசிக்கு பல உயிர்கள் பலியிடப்பட்டு வருகின்றன. 

கொலை, கொள்ளை, ஆயுதங்கள், போதை மருந்து கடத்தல் மற்றும் 'ஆன்லைன்' சூதாட்டங்களால் கடந்த ஓராண்டில் நாடும், நாட்டு மக்களும் சீரழிந்து, சீர்குலைந்துபோய் இருக்கிறார்கள். 'ஆன்லைன்' ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதை கண்டு, அந்த சூதாட்டத்தையே தடை செய்து அ.தி.மு.க. அரசு சட்டம் இயற்றியது. ஆன்லைன் ரம்மி தடை தி.மு.க. அரசு நீதிமன்றத்தில் முறையாக, மூத்த வக்கீல்களை வைத்து வாதாடாமல் இருந்ததால், 'ஆன்லைன்' சூதாட்டம் நடத்தும் நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமான தீர்ப்பினை பெற்றதால், 'ஜாம் ஜாம்' என்று 'ஆன்லைன்' சூதாட்டம் தற்போதும் நடைபெற்று வருகிறது. 

இதன் காரணமாக, பணம் இழந்தவர்களின் தற்கொலையும் தொடர்கிறது. 'ஆன்லைன்' ரம்மி தடை சட்டத்தை எப்படி கொண்டுவரலாம் என்று ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு அறிக்கை அளித்த பின்னரும், இன்னும் தடை சட்டம் பிறப்பிக்கப்படவில்லை.
 

தலைப்புச்செய்திகள்