Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சரியாக திட்டமிடாத அதிகாரிகள் : பாதாள சாக்கடைக்கு தோண்டிய குழிகளால் அவஸ்தை

ஜுன் 24, 2022 08:52

பொன்னேரி: பொன்னேரி நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளால், தெருச் சாலைகள் சேறும், சகதியுமாக மாறி இருப்பதால், மக்கள் பெரும் தவிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் வீடுகளை காலி செய்து, மாற்று இடங்களுக்கு மக்கள் குடிபெயர்ந்து வருகின்றனர். 

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் ஏற்பட்ட கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு காண, பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது.முதற்கட்டமாக, 54 கோடி ரூபாயில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள், 2019 மார்ச் மாதம் துவங்கப்பட்டன.

பள்ளி வாகனங்கள்: நகராட்சிக்கு உட்பட்ட, 1 - 5 வார்டுகளை தவிர்த்து, மற்ற 22 வார்டுகளில், 41 கி.மீ., தொலைவிற்கு, பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடியிருப்பு பகுதிகளில், நிலத்திற்கடியில் சிமென்ட் குழாய் பதிக்கும் பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்படுகின்றன. அவை சரிவர மூடப்படாமல், அரைகுறையாக விடப்படுகின்றன.

மக்கள் மழை பொழிந்தால், திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடங்களில் மழை நீர் தேங்கி, சேறும், சகதியுமாக மாறுகிறது.குடியிருப்பு மக்கள், தங்களது இருசக்கர வாகனம் மற்றும் கார்களை வெளியே எடுத்து வர முடியாமல் தவிக்கின்றனர். , அவசர தேவைகளுக்கு வெளியேற முடியாமல் வீடுகளில் முடங்கி இருக்கும் நிலை உள்ளது 

பள்ளி வாகனங்கள், ஆட்டோ, ஆம்புலன்ஸ் என, எந்தவொரு வாகனமும் குடியிருப்பு பகுதி களுக்கு வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.இரவு நேரங்களில் நடந்து செல்வோர், சேறும், சகதியுமாக உள்ள சாலை பள்ளங்களில் விழுந்து, சிறு சிறு காயங்களுக்கு உள்ளாகின்றனர்.

குற்றச்சாட்டு: பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஒவ்வொரு பகுதியாக முழுமையாக முடித்து, சாலைகளை அமைக்காமல், ஒரே நேரத்தில் பல பகுதிகளில் தோண்டப்படுவதால், மாற்றுப்பாதைகளும் இன்றி மக்கள் தவிக்கின்றனர்.பாலாஜி நகர், சக்தி நகர், என்.ஜி.ஓ., நகர் பகுதிகளில் வாடகைக்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள் ஒவ்வொருவராக, வீடுகளை காலி செய்து, வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வரும் நிலை உள்ளது.

சொந்த வீடு உள்ளோர், வேறுவழியின்றி சிரமத்துடன் வசிக்கின்றனர். தற்போது, ஆலாடு சாலையில் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், ஆலாடு, சிவபுரம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பொன்னேரிக்கு வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.இந்த கிராமங்களுக்கு மாற்றுப்பாதையாக உள்ள பாலாஜி நகர், வேண்பாக்கம் ஆகிய பகுதிகளிலும், திட்டப் பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு இருக்கின்றன.

மேற்கண்ட கிராமங்கள் வழியாக, சென்று வந்த அரசு பேருந்தும், ஒரு மாதமாக இயக்கப்படாமல் உள்ளது.நகராட்சி உட்பட்ட பகுதி களை தவிர்த்து, கிராமவாசிகளும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.நகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம் சரியான திட்டமிடல் இன்றி பணிகள் மேற்கொள்வதாக குடியிருப்புவாசிகள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

பாதாள சாக்கடை திட்டப் பணிகளை துரிதமாகவும், குடியிருப்புவாசிகளுக்கு சிரமம் ஏற்படுத்தாமலும் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தற்காலிக பாதை வசதி: பாதாள சாக்கடை திட்டப் பணிகள் இன்னும் முழுமை பெறாததால், சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெறவில்லை. சேறும், சகதியுமாக உள்ள இடங்களில் தற்காலிக பாதைகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். திட்டப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள, ஒப்பந்த நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்படும்.-கே.எம். தனலட்சுமி, நகராட்சி ஆணையர், பொன்னேரி.

மாற்று பாதைகள் இல்லை: பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துரிதமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை, 70 சதவீத பணிகள் முடிந்துள்ளன. வீடுகளுக்கு, 'பைப் லைன்' பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.பாலாஜி நகர், சக்தி நகர், என்.ஜி.ஓ., நகர் பகுதிகளில் மாற்று பாதைகள் ஏதும் இல்லை. பணிகள் முடிந்த இடங்களில் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் மண் சமன் செய்து வருகிறோம். 

மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களிலும், தற்காலிக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அக்டோபருக்குள் பணிகளை முடித்து விடுவோம்.- வெ.அமலதீபன், உதவி செயற்பொறியாளர்,பாதாள சாக்கடை திட்டம், பொன்னேரி.

தீவுகளாக மாறிய குடியிருப்புகள்: விவசாய நிலங்களில் உள்ளதுபோல், தெருச்சாலைகள் சேறும் சகதியுமாக உள்ளன. தங்களது ஷூ, செருப்புகளை கையில் எடுத்து செல்லும் பள்ளி மாணவர்கள், பிரதான சாலைக்கு சென்று, கால்களை சுத்தம் செய்த பின், அவற்றை அணிகின்றனர். உயிர் போகும் அவசரம் என்றாலும் ஆட்டோ கூட வருவதில்லை. எங்களது வாகனங்கள் பல மாதங்களாக வீடுகளில் முடங்கி கிடக்கின்றன.

வயதானோர் சேற்றில் நடந்து செல்லும்போது, கீழே விழுந்து காயம் அடைகின்றனர். சரியான திட்டமிடல் இன்றி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு பகுதியில் பணிகள் முடிந்தவுடன், அங்கு சாலைகளை சீரமைத்துவிட்டு, அடுத்த பகுதிக்கு சென்றால், மாற்றுப்பாதைகளில் மக்கள் பயணிப்பர். ஒரே நேரத்தில் குடியிருப்பு பகுதிகளைச் சுற்றிலும் பள்ளங்கள் தோண்டி, தீவுகளாக மாற்றி உள்ளனர். நகராட்சி நிர்வாகமோ, மக்களின் தவிப்பை கண்டு கொள்ளாமல் உள்ளது
 

தலைப்புச்செய்திகள்