Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எழும்பூரில் சர்வதேச ரத்ததான தின விழிப்புணர்வு நிகழ்ச்சி 

ஜுன் 15, 2022 11:55

சென்னை எழும்பூரில் சர்வதேச ரத்ததான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. சென்னை உலகம் முழுவதும் ஜூன் 14-ந் தேதி (நேற்று) சர்வதேச ரத்ததான தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று எழும்பூர் நலவாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில், சர்வதேச ரத்ததான தினத்தை முன்னிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், பரந்தாமன் எம்.எல்.ஏ மற்றும் டாக்டர்கள், நர்சுகள் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு முன்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்ததானம் வழங்கினார். இதைத்தொடர்ந்து ரத்ததானம் செய்யும் 61 தன்னார்வலர்களுக்கு நினைவு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் பேசியதாவது:- ரத்ததானம் அளிப்பது குறித்த அவசியத்தை உணர்ந்து, அதற்கான விழிப்புணர்வையும் பெற்று ரத்ததானம் வழங்கும் தன்னார்வலர்களை மகிழ்ச்சியோடு பாராட்டுகிறோம். 

அதேபோல் பெரும்பாலானோர் அவர்களாகவே ரத்ததானம் வழங்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம். ஒருவர் செய்யும் ரத்ததானம் 4 உயிரை காக்கும் என்கிற நிலையில் ரத்ததானம் அளிப்பது மிகுந்த மனநிறைவை தரும். எனவே புதிதாக ரத்ததான தன்னார்வலர்கள் உருவாக வேண்டும். தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 3 லட்சத்து 43 ஆயிரத்து 667 அலகுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல லட்சம் பேர் பயன்பெறுகிறார்கள். 

தமிழகத்தில் 97 இடங்களில் அரசு ரத்த மையங்களும், 220 தனியார் ரத்த மையங்களும், 373 அரசு ரத்த சேமிப்பு மையங்களும், 139 தனியார் ரத்த சேமிப்பு மையங்களும், 42 ரத்த மூலக்கூறு பகுப்பாய்வு கூடங்களும் இயங்கி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ரத்ததானம் செய்பவர்கள் ஏராளமானோர் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக ரத்ததானம் வழங்கும் தன்னார்வலர்களின் பட்டியலை தயாரித்து, அவர்களின் விவரங்களை சேகரித்து வைப்பதற்காக பதிவேடு ஒன்றை செல்போன் செயலி மூலம் உருவாக்க வேண்டும் என துறை சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

அதற்காக நிதிநிலை அறிக்கையில் ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. விரைவில் செல்போன் செயலியும், பதிவேடும் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அதேபோல் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சர்வதேச ரத்ததான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அம்மருத்துவமனையின் 'டீன்' டாக்டர் ஜெயந்தி தலைமை தாங்கினார். 

தலைப்புச்செய்திகள்