Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

17ம் நூற்றாண்டு மாலைக்கோயில் கண்டுபிடிப்பு

ஜுன் 04, 2022 10:54


அவனியாபுரம் : மதுரை அருகே 17 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மாலைக் கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் முனீஸ்வரன், லட்சுமண மூர்த்தி ஆகியோர் மாணவர்களுடன் களப்பணி மேற்கொண்டனர்.

விமான நிலையம் பின்புறம் மண்ணில் புதைந்த நிலையில் கலை நுட்பத்துடன்கூடிய 400 ஆண்டுகள் பழமையான 'சதிக்கல்'லை கண்டுபிடித்தனர்.பேராசிரியர்கள் கூறியதாவது: சங்ககாலம் முதல் தமிழர் கலாசாரத்தில் நடுகற்கள் வழிபாடு உள்ளது. குறிப்பாக மன்னர்களுக்கு இடையே ஏற்படுகிற போர், பூசல் உட்பட பல காரணங்களால் இறந்த வீரர்களின் நினைவாக நடுகற்கள் நட்டு வழிபடுவர்.பசுக்களை கவர்தல், மீட்டல், எதிரிகளிடமிருந்து நாட்டைக் காத்தல், புலி, பன்றி, யானையுடன் சண்டையிடுதல், அரசனின் வெற்றிக்காக போரிடுதல் ஆகிய காரணங்களால் இறந்த கணவனுடன், உடன்கட்டை ஏறிய மனைவிக்கு அமைக்கப்பட்ட நடுகல்லின் மேல் எழுப்பப்படும் கோயிலே 'மாலைக் கோயில்'. இங்கு அமைக்கப்படும் சிற்பத்தில் கணவருடன் மனைவியும் இருப்பது போன்று அமைக்கப்பட்டிருக்கும்.

இப்பெண் சுமங்கலியாக இறந்தாள் என்பதை காட்ட கையை உயர்த்தி இருப்பது போன்றும், அதில் வளையல் உள்ளிட்ட அணிகலன்கள் அணிந்தவராகவும் காணப்படுவாள். இக் கோயில்களை மாலையீடு, மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்றும் அழைப்பர். இப்பகுதி வேளாண்மை செறிந்த பகுதியாகவும், வணிக சந்தை கூடம் இருந்ததாகவும், வேளாண் பகுதியை பாதுகாக்க எல்லைப்பகுதியில் போர் வீரர்கள் நிறுத்தப்பட்டதாகவும் அறிய முடிகிறது.புதைந்த நிலையில் காணப்பட்ட சதிக்கல், தோரணவாயில் கலைநயத்தோடு 4 அடி உயரம், 3 அடி அகலம் கொண்டது.

கற்சிற்பத்தில் ஆண் மற்றும் பெண்ணின் தலையில் கொண்டைப் பகுதி சற்று சாய்வாகவும், ஆடவன் கையில் நீண்ட கத்தியும், அணிகலன்களுடன் கால் பகுதியை மடக்கி தொங்கவிட்டு அமர்ந்த நிலையிலும் காணப்படுகிறது. மதுரையை சுற்றி பல குறுநில மன்னர்கள் ஆண்ட தடயங்கள் புதைந்த நிலையில் கேட்பாரற்று காணப்படுகிறது. இதுபோன்ற சிற்பங்களை பாதுகாத்தால் நமது வரலாற்றுச் சுவடுகளை அழியாமல் பாதுகாக்க முடியும், என்றனர்.

தலைப்புச்செய்திகள்