Thursday, 23rd May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கம்பி, கான்கிரீட் இல்லாமல் மாடி வீடு : இன்ஜினியர் அசத்தல்

ஜுன் 04, 2022 02:02

பெரம்பலுார் மாவட்டம், அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் - -லோகாம்பாள் தம்பதியரின் மகன் ஜெகதீசன், 30. இவருக்கு ரம்யா என்ற மனைவியும், செந்தமிழ்வேந்தன் என்ற மகனும் உள்ளனர். தனியார் கல்லுாரியில் பி.இ., சிவில் படித்த பின், புதுச்சேரி மாநிலம், ஆரோவில் பகுதியில் உள்ள பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த ஒருவர் நடத்தும் 'எர்த் இன்ஸ்டியூட்டில்' தற்சார்பு முறையில் வீடு கட்டும் பயிற்சி பெற்றார்.


தொடர்ந்து, வித்தியாசமான முறையில் பழமையான முறையில், கம்பி, கான்கிரீட் இல்லாமல் சுடாத செங்கற்களை பயன்படுத்தி, மண் மாடி வீடு கட்ட விரும்பினார். அன்னமங்கலம் கிராமத்தில் 2021 மார்ச்சில் இதற்கான கட்டுமான பணியை துவங்கினார்.தற்போது, கட்டுமான பணி முடிந்து, கடந்த 1ம் தேதி கிரஹப்பிரவேசம் நடத்தி உள்ளார். வீட்டின் அடித்தளம் கருங்கற்களாலும், சுவர்கள் அனைத்தும் சுடாத செங்கற்களாலும் கட்டப்பட்ட இந்த வீடு, பார்க்க மண் வீடு போல் அழகாக தோற்றம்அளிக்கிறது.

செம்மண்ணில் சிறிதளவு சிமென்ட் சேர்த்து மின்சாரம் தேவைப்படாத மிஷின் மூலம் நல்ல அழுத்தம் கொடுத்து, மண் செங்கற்களை உருவாக்கியுள்ளார். இந்த கற்களை கொண்டு வீடு கட்டப்
பட்டுள்ளது.மேற்கூரைக்கு கம்பி மற்றும் கான்கிரீட் பயன்படுத்தாமல், சுடப்படாத மண் கல்லை 'ஆர்ச்' வடிவில் மேற்கூரையை கட்டி உள்ளார்.வீட்டின் மாடி கைப்பிடி, வீட்டின் முன் பக்க கேட், ஜன்னல் கிரில் இவை அனைத்தும் இருசக்கர வாகனத்தில் உள்ள 'செயின் ஸ்பிராக்கெட்' பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளது. முதல் தளத்தில், குகை போன்ற அமைப்பில் ஒரு அறை கட்டப்பட்டு உள்ளது.

பழங்கால முறையை பயன்படுத்தி தரை தளம் மற்றும் முதல் தளம் கட்டப்பட்டுள்ளதால், கோடை காலத்தில் வெயில் தாக்கம் இல்லாமல், வீடு எப்போதும் குளுகுளுவென உள்ளது.வீட்டில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் மழை நீர் சேமிப்பு தொட்டியும், மாடித் தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டில் தரைக்கோ, சுவருக்கோ எங்கும் டைல்ஸ் பயன்படுத்தவில்லை. வீட்டில் கதவு, ஜன்னலுக்கு புதிய மரங்களை பயன்படுத்தாமல், பழைய மரங்களை பயன்படுத்தி உள்ளார். இவரின் வித்தியாசமான முயற்சி குறித்து அறிந்து கொள்ளவும், இவரை பாராட்டவும் 99436 -77481 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

தலைப்புச்செய்திகள்