Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தண்ணீருக்காக வற்றிய கிணற்றில் உயிரை பணயம் வைக்கும் கிராம மக்கள்

ஜுன் 02, 2022 10:34

டிந்தோரி: மத்திய பிரதேச மாநிலத்தில் தண்ணீருக்காக தினந்தோறும் வறண்டு போன கிணற்றில் தங்களது உயிரை பணயம் வைத்து வருகின்றனர் குஸியா (Ghusiya) கிராம மக்கள். இந்த செய்தியை இந்திய நியூஸ் ஏஜென்சியான ANI வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.

தண்ணீரே இல்லாத வற்றிய கிணற்றில் தண்ணீர் எடுக்க கிராம மக்கள் நீண்ட தூரம் நடந்து வந்து, படிகளோ அல்லது கயிறு கூட இல்லாமல் கிணற்றின் பக்கவாட்டில் பதிக்கப்பட்டுள்ள கற்களை மட்டுமே பிடித்து இறங்கியும், ஏறியும் வருவதாக தெரிகிறது. கிணற்றில் அடிப்பகுதியில் கொஞ்சமாக தேங்கி நிற்கும் தண்ணீரை குடத்தில் பிடித்த பிறகு மீண்டும் மேலே ஏறி வருகின்றனர். தண்ணீருக்காக தங்கள் உயிரையே மக்கள் பணயம் வைக்கும் இந்த காட்சியை பார்க்க வேதனையாக உள்ளது.

தங்கள் கிராமத்தில் நீண்ட நாட்களாக தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாகவும். இதற்கு நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் மட்டுமே தங்கள் ஊர் பக்கம் அரசியல் அமைப்பினர் மற்றும் அரசு அதிகாரிகள் வருவதாகவும். அதனால் இந்த முறை தங்கள் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையில் தேர்தலில் வாக்கு செலுத்தாமல் புறக்கணிக்கப் போவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் கிராமத்தில் மூன்று கிணறுகள் இருப்பதாகவும். மூன்றிலும் இதே நிலை எனவும் தெரிவித்துள்ளனர். இந்த கிராமத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் தான் நர்மதை நதி இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தை தற்போது பாஜக ஆட்சி செய்து வருகிறது. வீடுதோறும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் நல் ஜல் திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. டிந்தோரி மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டப்பேரவைத் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த மாநிலத்தில் சுமார் 84 வட்டங்களில் கடுமையான குடிநீர் பஞ்சம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்