Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோயில் விழாக்களில் ஆடல், பாடலுக்கு அனுமதியில்லை

ஜுன் 02, 2022 08:56

மதுரை: கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மே 1 முதல் ஜூன் 1 வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் 5 வாரம் கோடை விடுமுறை கால நீதிமன்றம் நடைபெற்றது. முதல் நான்கு கோடை விடுமுறை கால நீதிமன்றத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு சென்னை மற்றும் மதுரை கிளையில் ஆயிரக்கணக்கான மனுக்கள் தாக்கலானது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், ஆபாச நடனம், பாடல்கள் இருக்கக் கூடாது, பார்வையாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளுடன் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கினர். இந்நிலையில், உயர் நீதிமன்ற கிளையில் மதுரை, திருச்சி, நெல்லை உட்பட 14 மாவட்டங்களிலிருந்து கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு தாக்கலான 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் நீதிபதி ஆர்.தாரணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, கோயில் விழாக்களை வழக்கம் போல் நடத்திக் கொள்ளலாம். ஆனால் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க முடியாது. ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கும் கோயில் விழாவுக்கும் என்ன தொடர்பு உள்ளது? இதற்கு செலவாகும் பணத்தை நீர் நிலைகளை தூர்வாருவதற்கு பயன்படுத்தலாம் என நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து பலர் மனுவை திரும்ப பெறுவதாக தெரிவித்தனர். அதற்கு அனுமதி வழங்கி திரும்ப பெற்ற மனுக்களை தள்ளுபடி செயது நீதிபதி உத்தரவிட்டார். மற்ற மனுக்களின் விசாரணையை ஒத்திவைத்தார்.

தலைப்புச்செய்திகள்