Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்டெர்லைட் வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் 64 பேர் ஆஜர்: மறு விசாரணை கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஜுன் 01, 2022 05:53

மதுரை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் 64 பேர் ஆஜராகினர். மறு விசாரணை கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018-ல் பொதுமக்கள் தூத்துக்குடியில் தொடர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் நூறாவது நாளான 22.5.2018-ல் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 101 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. முதல் விசாரணையின் போது 101 பேரில் 27 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அடுத்த விசாரணையின் போது நேரில் ஆஜராக 74 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதித்துறை நடுவர் பசும்பொன் சண்முகையா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சம்மன் அனுப்பப்பட்ட 74 பேரில் 64 பேரில் நேரில் ஆஜராகினர். அவர்கள் அடையாளம் காணப்பட்ட பின்னர் விசாரணையை ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக 13 பேர் துப்பாக்கிச்சூடு வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரி மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர்கள் கனகவேல், ராஜேந்திரன், தெய்வம்மாள், ஜான்வின்சென்ட், சுரேஷ்பிரபு, ஹரி ராஜாராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் வாஞ்சிநாதன் கூறுகையில், "சிபிஐ விசாரணை ஒருதலைபட்சமாக உள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றப்பத்திரிகையில் போலீஸார் யாரும் வழக்கில் சேர்க்கப்படவில்லை. இதனால் துப்பாக்கிச்சூடு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும். நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும். இதற்காக முதல்வரை நேரில் சந்தித்து மனு கொடுக்கவுள்ளோம். நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்வோம்" என்றார்.
 

தலைப்புச்செய்திகள்