Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரை காலி செய்த மக்கள்: அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை

மே 31, 2022 11:04

ஓசூர் : தேன்கனிக்கோட்டை அருகே மலை கிராமத்தில், அடிப்படை வசதி இல்லாததால், ஊரை காலி செய்த குடும்பத்தினர், தர்மபுரி மாவட்டத்தில் குடியேறி விட்டனர். தற்போது, நான்கு குடும்பத்தினர் மட்டுமே அங்கு வசிக்கின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட புள்ளள்ளி மலை கிராமம் உள்ளது. இங்கு, தர்மபுரி மாவட்டத்திற்குள் நுழைந்து, அங்குள்ள பஞ்சப்பள்ளி வழியாக மலை மீதேறி, கரடு, முரடான பாதை வழியாக தான் செல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட 8 கி.மீ., துாரம் மலையேறினால், இக்கிராமத்தை அடைய முடியும். இயற்கை அழகு நிறைந்த இக்கிராமத்தில், பழமையான கட்டடக்கலைகளை பறைசாற்றும் பல வீடுகள் உள்ளன. ஆனால், அதில் யாரும் வசிக்கவில்லை. இதனால் வீடுகள் புதர்மண்டி, செடி, கொடிகள் வளர்ந்து பாழாகி வருகின்றன.நாடு சுதந்திரமடைந்து, 75 ஆண்டுகள் ஆன போதும், இக்கிராமத்துக்கு சாலை, போக்குவரத்து, சுகாதாரம் போன்ற போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் இங்கு வசித்த, 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், படிப்படியாக வெளியேறி, தர்மபுரி மாவட்டத்திலுள்ள பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளியில் குடியேறி விட்டனர். அதனால், அவர்கள் வசித்த வீடுகள், தற்போது பயன்பாடின்றி உள்ளன.இக்கிராமத்தில் தற்போது நான்கு குடும்பத்தினர் மட்டுமே வசிக்கின்றனர். இங்குள்ள அரசு துவக்கப்பள்ளி கட்டடம் பயன்பாடின்றி புதர்மண்டி கிடக்கிறது.

இக்கிராம மக்கள் இன்றளவும், போக்குவரத்து வசதியின்றி, கழுதை அல்லது குதிரைகளில் தான், தர்மபுரி மாவட்டத்திற்கு தினமும் சென்று, அன்றாட தேவைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி வருகின்றனர்.இக்கிராம மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக, 8 கி.மீ., மலைப்பாதையில் காட்டு வழியாக நடந்து சென்று, தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. இந்த அவலம் இன்றளவும் நீடிக்கிறது.கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்டத்தின் வேறு ஏதாவது ஒரு பகுதியில் வீடுகளை கட்டி கொடுத்து, தங்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தினால், புள்ளள்ளி கிராமத்தை காலி செய்ய தயாராக இருப்பதாக, அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.இதற்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் நிர்வாகம் அல்லது தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்