Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுதா ரகுநாதனுக்கு எதிராக நிலுவையில் இருந்த வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

மே 27, 2022 02:15

சென்னை: கர்னாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெமினி ஆடியோ மற்றும் ஜெமினி என்டர்டெய்ன்மென்ட் மொபைல் இந்தியா சர்வீசஸ் என்ற நிறுவனம், தென்னிந்திய இசை கம்பெனிகள் சங்கத்துடன் கடந்த 2012-ல் ஓர் ஒப்பந்தம் செய்தது. அதன்படி, இசை கம்பெனிகள் சங்க உறுப்பினர்களின் இசைக்கான உரிமத்தை வழங்க ஜெமினிநிறுவனம் முதல்கட்டமாக ரூ.2.70கோடி வழங்கியுள்ளது. அதன் பிறகு, குறிப்பிட்ட காலத்துக்குள் பாக்கியை ஜெமினி நிறுவனம் செலுத்தவில்லை என்பதால், ஒப்பந்தம் ரத்தானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒப்பந்தப்படி இசைக்கான உரிமத்தை வழங்கவில்லை என்றும், பெற்ற தொகையை திருப்பித் தராமல் மிரட்டியதாகவும் இசை கம்பெனிகள் சங்கத் தலைவராக இருந்த கர்னாடக இசைக் கலைஞர் சுதாரகுநாதன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜெமினி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிமன்றம், சுதா ரகுநாதன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பியது. இந்த வழக்கை ரத்துசெய்யக் கோரி சுதா ரகுநாதன் உள்ளிட்டோர் 2015-ல் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகரன், ‘‘இது உரிமையியல் பிரச்சினை என்பதால், உரிமையியல் நீதிமன்றத்தை நாடவேண்டும்’’ என்று கூறி, சுதா ரகுநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக நிலுவையில் இருந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்