Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கல்லா கட்டும் மினி பட்ஜெட் படங்கள்

மே 25, 2022 06:16

கொரோனா தொற்றால் தமிழ் சினிமா கடந்த இரண்டு வருடங்களாகத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இரண்டு வருடங்களாக பெரிய படங்கள் மட்டுமே வெற்றி பெற்று வருகிறது. சிறிய பட்ஜெட் படங்களுக்கும் இரண்டாம், மூன்றாம் கட்ட நடிகர்களின் படங்களுக்கும் பெரிய அளவில் வசூல் இல்லாமல் இருந்தது. 2022 துவக்கத்திலும் கொரோனா மூன்றாவது அலையின் பாதிப்பு இருந்தது. ஆனால், சீக்கிரமே அந்த அலை மறைந்து போனதால் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வர ஆரம்பித்தனர்.

கடந்த ஐந்து மாதங்களில் வெளியான படங்களில் பிப்ரவரி மாதம் முதல் சில குறிப்பிடத்தக்க வெற்றிகள் வர ஆரம்பித்தன. 'வலிமை, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட்' ஆகிய முன்னணி நடிகர்களின் படங்கள் வசூல் ரீதியாக ஓரளவுக்கு கல்லா கட்டியதாக கூறப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் இவை கிட்டத்தட்ட தோல்வி படங்கள் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். உண்மை நிலவரம் தயாரிப்பாளர்களுக்கே வெளிச்சம். காரணம் படத்தில் கதை என்று பெரிதாக இல்லை. பட்ஜெட் அதிகம் என்பதால் லாபம் இல்லாமலே இருக்கலாம்.
அதேசமயம் அடுத்த கட்ட நடிகர்களின் மினி பட்ஜெட் படங்களான “எப்ஐஆர், மன்மத லீலை, செல்பி, காத்து வாக்குல ரெண்டு காதல், டான்' ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளன. இந்த படங்களின் கதை வித்தியாசமாக இருந்ததுடன் ரசிகர்களை கவரும் விதமாக அமைந்தது. இதனால் ஓரளவுக்கு நல்ல லாபம் பார்த்தனர். இவற்றையெல்லாம் மீறி டப்பிங் படங்களான 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' படங்கள் நேரடி தமிழ்ப் படங்களைக் காட்டிலும் நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளன.

இந்தாண்டு தியேட்டர்களில் இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்து படங்கள் திரையிடப்பட்ட ஆரோக்கியமான ஒரு சூழல் உருவாகியுள்ளது. இந்த வருடம் கோடை விடுமுறை என்பது நீண்ட நாட்கள் இல்லாமல் போய்விட்டது. 12ம் வகுப்பு, 11ம் வகுப்பு, 10ம் வகுப்புகளுக்கு இப்போதுதான் அடுத்தடுத்து தேர்வுகள் முடிவடைய உள்ளன. இதனால், குடும்பத்தினர் இந்த கோடை விடுமுறைக்கு தியேட்டர்களுக்கு அதிகம் வர முடியாமல் போய்விட்டது.

ஜுன் இரண்டாவது வாரத்தில் தான் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் ஜுன் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் படங்களுக்கு நல்ல வசூல் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஜுன் 3ல் வெளியாகும் கமல்ஹாசனின் 'விக்ரம்' படம் கதை உண்மையில் நன்றாக இருந்தால் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆறேழு மாதங்களில் நிறைய படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்