Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெட்ரோல், டீசல் விலை குறித்து பேரணிக்கு தயாராகிறது பா.ஜ.

மே 25, 2022 02:41

பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு, 72 மணி நேரத்துக்குள் குறைக்க வேண்டும். இல்லையென்றால், கோட்டையை முற்றுகையிடுவோம் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அண்ணாமலை விதித்த, 72 மணி நேர கெடு, இன்றோடு முடிவடைகிறது. இதையடுத்து, தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில், நேற்று போராட்டம் தொடர்பாக ஆலோசனை நடந்தது.

இது குறித்து, பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: ஆட்சிக்கு பொறுப்புக்கு வந்ததும், பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ஐந்து ரூபாய், டீசல் விலையில் லிட்டருக்கு நான்கு ரூபாய் குறைக்கப்படும் என, தி.மு.க.,வாக்குறுதி அளித்தது.ஆனால், பெட்ரோல் விலையில் மூன்று ரூபாய் மட்டும் குறைத்து விட்டு, சலுகை வழங்கியது போல பீற்றி கொண்டனர்.டீசல் விலையில், ஒரு ரூபாய் கூட குறைக்காமல் மக்களை ஏமாற்றிவிட்டனர்.
மத்திய அரசின் கலால் வரியை காட்டிலும், மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி தான்அதிகம். ஆனாலும், மாநில அரசு வரியை குறைக்காதாம். மத்திய அரசு, மாநிலங்களுடன் பகிரும், அடிப்படையான கலால் வரியில், எந்த மாறுதலும் செய்யவில்லை.மத்திய அரசின் இந்த நடவடிக்கையை முழுமையாக மறைத்து விட்டு, தாங்கள் மட்டுமே உத்தமர்கள் போல் காட்டி கொள்ளும் தி.மு.க.,அரசு, போலி வேஷம் போடுகிறது. இதை மக்கள் புரிந்துள்ளனர்.

கெடு முடிந்த பின்னும் தமிழக அரசு, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத பட்சத்தில், அறிவித்தபடியே கோட்டையை நோக்கி, பா.ஜ., பேரணி நடக்கும்;முற்றுகை போராட்டமும் நடத்தப்படும்.அதற்கான ஏற்பாடுகளை, தமிழக பா.ஜ., துவங்கி விட்டது. ஜூன் முதல் வாரத்தில், போராட்டம் நடத்ததீர்மானித்து உள்ளோம்.ஏற்கனவே, திருவாரூர் தெற்கு வீதிக்கு கருணாநிதி பெயர் சூட்ட முயன்ற அரசின் முயற்சிக்கு எதிராக, பா.ஜ., பிரம்மாண்ட போராட்டம் நடத்தியது. அதை விட, பிரம்மாண்டமாக கோட்டையை நோக்கிய பேரணி நடத்தப்படும் என்று அவர்கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்