Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குரங்கு அம்மை பரவலை தடுக்க தீவிர பரிசோதனை : மா.சுப்பிரமணியன் தகவல்

மே 25, 2022 02:38

நாகர்கோவில்: தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பரவாமல் தடுக்க அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கன்னியாகுமரி அரசு பொது மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குரங்கு அம்மை நோய் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இது டிஎன்ஏ வைரஸ், பாக்ஸ் வைரஸ், பெரியம்மை, பசு அம்மை போன்ற வைரஸ் வகையை சார்ந்தது. குரங்கு, அணில், எலியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மனிதனிடம் இருந்து இந்நோய் பரவுகிறது. நோய் பாதித்தவர் அணிந்திருந்த ஆடைகள் மூலமாகவும் பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல் வலி, களைப்பு, உடல் அரிப்பு, தோலில் புள்ளிகள், கொப்பளங்கள் ஆகியவை இந்நோய்க்கான அறிகுறிகளாகும். நோய் பாதிப்பு தெரிய 7 முதல் 14 நாட்கள் வரை ஆகும். ஆர்டிபிசிஆர் மாதிரிகள், கொப்பள நீர், ரத்தம், சளி போன்றவற்றை பரிசோதனை செய்யும்போது இந்நோயை கண்டறிய முடியும். குரங்கு அம்மை நோய்க்கான தடுப்பூசி அமெரிக்காவில் மட்டுமே உள்ளது.

தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் இந்த நோயின் தாக்கம் உள்ளது. ஆனால், உயிரிழப்பு ஏதும் இல்லை. இந்நோய் பரவாமல் தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மாநிலத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் குரங்கு அம்மை நோய் அறிகுறியுடன் எவரேனும் வந்தால், அந்தந்த மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநருக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று அமைச்சர் கூறினார்.

இதனிடையே, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவர்களை கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

குரங்கு அம்மை பல நாடுகளில் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து தேசிய நோய்த் தடுப்பு மையத்தின் அறிவுறுத்தலின்படி, பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதுவரை கண்டறியப்படாத, தோலில் ஏற்படும் கொப்புளங்கள் உடையவர்களையும், அமெரிக்கா, இங்கிலாந்து ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 21 நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பயணிகளில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவர்கள் அல்லது அறிகுறி உள்ளவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தி உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களின் விவரங்களை ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு குழுமத்தின், மாவட்ட கண்காணிப்பு அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம், சளி மற்றும் கொப்புளங்களின் மாதிரிகள் உடனடியாக புணேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு ஆய்வுக்காக அனுப்ப வேண்டும். ஆய்வில் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டால், கடந்த 21 நாட்களில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை உடனடியாக கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்