Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பட்டாசு ஆலைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை

மே 19, 2022 01:25

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 950-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. பட்டாசு வெடிப்பதால் காற்றில் மாசு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் பட்டாசு உற்பத்தியாளர்கள் பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சிவகாசி, சாத்தூர் அருகே தாயில்பட்டி மற்றும் வெம்பக்கோட்டை பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் சுப்ரீம் கோர்ட்டு அறிவுரையின்படி பட்டாசு தயாரிக்கப்படுகிறதா? என சி.பி.ஐ. அதிகாரிகள் 3 நாட்களாக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் வெடிப்பொருட்கள் கட்டுப்பாட்டு அலுவலர் தியாகராஜன் நடத்திய சோதனையில் தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி தயாரிக்கப்படுவதை கண்டுபிடித்து இதுபற்றி தலைமை அலுவகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் பட்டாசு ஆலைகளில் நேரடியாக சோதனை நடத்தி உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வெடிப்பொருட்கள் கட்டுப்பாட்டு அலுவலர் தியாகராஜன் தலைமையில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 17-ந்தேதி முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக பட்டாசு விற்பனை நிலையங்களில் பட்டாசுகளை பார்வையிட்டு பாதுகாப்பான பட்டாசுகளை தயாரிக்காத நிறுவனங்கள் முகவரிகளை தெரிந்து கொண்டு நேற்று சம்மந்தப்பட்ட பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தினர்.

இன்று 3-வது நாளாக சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பேரியம் நைட்ரேட் (பச்சை உப்பு) பயன்படுத்தாமல் பாதுகாப்பான முறையில் பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா? அல்லது கோர்ட்டு உத்தரவை பின்பற்றாமல் பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர். அப்போது பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி காற்றில் மாசு ஏற்படாத வகையிலான பட்டாசுகள் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும். அதனை கடைபிடிக்க தவறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். இந்த ஆய்வு நாளை (20-ந்தேதி) வரை தொடர்ந்து நடைபெறும் என்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த சில பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தங்களது பட்டாசு ஆலைகளை பூட்டி வைத்துள்ளனர். அவைகள் குறித்தும் சி.பி.ஐ. அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை பட்டாசு ஆலை உரிமையாளர்களை கலக்கமடைய வைத்துள்ளது.

தலைப்புச்செய்திகள்