Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் பயணம் செய்ய தடை

மே 18, 2022 05:06

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை நீர்வரத்து விநாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக இருந்தது. கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளிலும், தமிழகத்தை நோக்கி வரும் காவிரி ஆறு அமைந்துள்ள வனப்பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்ததால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தின் அளவில் உயர்வு ஏற்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை 18-ம் தேதி காலை அளவீட்டின்படி நீர்வரத்து விநாடிக்கு 20,000 கனஅடியாக பதிவானது.

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அளவு விநாடிக்கு 20,000 கன அடியை எட்டும்போது ஆற்றில் நீரோட்டத்தின் வேகம் அதிகரிக்கும். மேலும் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதையை வெள்ளம் மூழ்கடிக்க தொடங்கும். இந்தச் சூழலில் சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லில் பிரதான அருவி மற்றும் ஆற்றில் குளிப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்படுவது வழக்கம்.

தற்போது ஒகேனக்கல் பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை அறிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள நீர்வரத்து உயர்வு காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் அனுமதிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இவ்வாறான செயல்களுக்கு தற்காலிக தடை அறிவிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும்" என்று அறிக்கையில் ஆட்சியர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்