Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாதாம் பால் செய்யலாம்

மே 17, 2022 06:06

தேவையான பொருட்கள்:
பாதாம் – ஒரு கைப்பிடி
கெட்டியான பால் – மூன்று கப்,
ஏலக்காய்த் தூள் – அரை டீஸ்பூன்,
சர்க்கரை – 100 கிராம்,
குங்குமப்பூ – சிறிதளவு.

செய்முறை :
ஒரு கைப்பிடி அளவிற்கு பாதாம் பருப்பை எடுத்து அலசி தண்ணீர் ஊற்றி இரவில் ஊற வைக்க வேண்டும். உடனே செய்ய வேண்டும் என்றால் சூடான தண்ணீரில் பாதாம் பருப்புகளை ஒரு மணி நேரம் ஊற வைத்தால் சுலபமாக உரித்து விடலாம்.
பாதாம் பருப்பை தோல் நீக்கி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். இது மேலே தூவி அலங்கரிப்பதற்கு தேவைப்படும்.
ஊற வைத்த பாதாம் தோலுரித்த பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் கெட்டியான பால் மூன்று கப் அளவிற்கு ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். பால் கொதிக்கும் பொழுது அரைத்து வைத்துள்ள பாதாம் பாலை சேர்க்க வேண்டும்.
பிறகு நன்கு கொதிக்கும் பொழுது பாதாம் பால் இனிப்புக்கு தேவையான அளவிற்கு சர்க்கரை சேர்க்க வேண்டும்.
நல்ல நிறத்தை கொடுக்க ஒரு சிட்டிகை குங்குமப் பூவை தண்ணீரில் கரைத்து சேர்க்கலாம். குங்குமப்பூ இல்லாதவர்கள் அதற்கு பதிலாக கேசரி பவுடர் கால் டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின்பு ஏலக்காயை நைஸாக அரைத்து சேருங்கள்.
பாதாம் பால் கெட்டியான பதத்திற்கு நன்கு கொதித்து வரும் பொழுது அடுப்பை அணைத்து மேலே பொடித்து வைத்துள்ள நட்ஸ் வகைகளை தூவி சுடச்சுட பரிமாறினால் சுவையான பாதாம் பால் தயார் அல்லது அதை நன்கு ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பருகினால் ஜில்லென்ற பாதாம் பால் ரெடி!

தலைப்புச்செய்திகள்