Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடி தோல்விபயத்தில் மனம்போன போக்கில் பேசி வருகிறார்: நாராயணசாமி

மே 07, 2019 10:53

புதுச்சேரி: புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, பிரதமர் நரேந்திர மோடி ராஜீவ்காந்தி மீது பொய்யான ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளார். போபர்ஸ் வழக்கினை பாராளுமன்ற நிலைக்குழு விசாரிக்க ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது உத்தரவிட்டார். அதன்படி விசாரணை நடத்தப்பட்டு போபர்ஸ் முறைகேட்டிற்கும், ராஜீவ்காந்திக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று நிலைக்குழு அறிக்கை சமர்ப்பித்தது.

அதற்கு பிறகு கோர்ட்டிலும் வழக்கு தொடுத்தனர். அந்த விசாரணையின் முடிவிலும் ராஜீவ்காந்தி குற்றமற்றவர் என்று தீர்ப்பு வந்துள்ளது. இதையெல்லாம் மறைத்து பிரதமர் மோடி ராஜீவ்காந்தியின் பெயரை களங்கப்படுத்தும் விதமாக தேர்தல் பிரசாரத்தில் அவதூறாக பேசியுள்ளார். நமது கலாசாரப்படி மறைந்த ஒரு தலைவரை நாம் விமர்சனம் செய்வது கிடையாது. ஆனால் பிரதமர் மோடி அபாண்டமான குற்றச்சாட்டை கூறி விமர்சனம் செய்துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது.

இதற்காக நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இதுபோன்ற விமர்சனத்தின் மூலம் அவர் பிரதமராக இருக்க தகுதியானவரா? என்று கேள்வியை நாட்டு மக்கள் கேட்கின்ற நிலையை அவர் உருவாக்கியுள்ளார். அவரது பேச்சுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தோல்வி பயத்தில் மனம்போன போக்கில் அவர் பேசி வருகிறார்.

இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவும், அதன் கூட்டணி கட்சிகளும் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்திக்கும். இதன் மூலம் மோடி பதவியை விட்டு வீட்டுக்கு செல்லும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. ராகுல்காந்தி பிரதமராக வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தில் தாக்கப்பட்டுள்ளார். ஒரு மாநில முதல்–அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. டெல்லியில் ஒரு மாநில முதல் மந்திரி பிரசாரம் செய்வதற்கு பாதுகாப்பு இல்லை என்றால் பிற மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்களின் நிலையைப்பற்றி சிந்திக்க வேண்டும்.

புதுவை மாநிலத்தில் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாரதீய ஜனதா எப்படி திட்டம் தீட்டியதோ அதேபோல் டெல்லியிலும் ஆட்சியை கலைக்க வேலையை பார்த்தனர். ஆட்சியை கலைக்க பாரதீய ஜனதா சதி திட்டம் செய்கிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கமாக கூறினார். அது தற்போது படிப்படியாக நிரூபணம் ஆகி வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும்.

டெல்லியில் முதல் மந்திரிக்கு பாதுகாப்பு இல்லை என்றால் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? அதனால்தான் டெல்லிக்கும், புதுச்சேரிக்கும் மாநில அந்தஸ்து கேட்கிறோம்.

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அடுத்து 4 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இந்த 22 தொகுதிகளிலும் தி.மு.க. அமோக வெற்றிபெறும். இதன் மூலம் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நடைபெறும். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சராக வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

இந்த சூழலில் எம்.எல்.ஏ.க்களை பதவிநீக்கம் செய்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீசு அனுப்பி உள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நேரத்தில் சபாநாயகர் இதுபோல் கடிதம் அனுப்பி நடவடிக்கை எடுப்பது ஜனநாயக விரோத செயல். இதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. விதிமுறைகளை மீறி எம்.எல்.ஏ.க்களை பதவிநீக்கம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தலைப்புச்செய்திகள்