Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எதிரிகளுக்கு தக்க பதிலடி தரும் இந்தியா: மத்திய உள்துறை அமைச்சர்

மே 04, 2022 11:33

பெங்களுரு : ''அமெரிக்கா, இஸ்ரேல் போல, இந்தியாவும் எல்லையில் வாலாட்டும் எதிரிகளுக்கு தக்க பதிலடி தருகிறது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு 'நிருபதங்கா பல்கலை'யை திறந்து வைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய இரு நாடுகள் தான் எல்லையில் எதிரிகள் வாலாட்டினால் உடனுக்குடன் பதிலடி தருகின்றன. இந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. முந்தைய ஆட்சியில், எல்லை தாண்டி பயங்கரவாத தாக்குதல் நடந்தால் கண்டன அறிக்கை மட்டும் விடுவர். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா, உடனுக்குடன் பதிலடி தருகிறது. 2016ல் உரியிலும், 2019ல் புல்வாமாவிலும் தாக்குதல்கள் நடந்த 10 நாட்களில், இந்தியா பாக்., எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்தது.

தற்போது இந்திய எல்லையில் வாலாட்டினால் பதிலடி தரப்படும் என்பதை உலகம் புரிந்து கொண்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட 2019, ஆக., 5 இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்க வேண்டிய நாள் ஆகும். 370வது சட்டப் பிரிவை நீக்கினால் ரத்த ஆறு ஓடும் என்றார்கள். ஒரு துரும்பும் விழக் காணோம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்த பின், ஆறு மத்திய பல்கலைகள், ஏழு இந்திய நிர்வாகவியல் கல்வி மையங்கள், ஏழு இந்திய தொழில்நுட்ப மையங்கள், 209 மருத்துவ கல்லுாரிகள், 320 பல்கலைகள், 5,709 புதிய கல்லுாரிகள் துவக்கப்பட்டுள்ளன. புதிய கல்வித் திட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தும் பெருமை கர்நாடகாவுக்கு கிடைத்துள்ளது என்று அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்